திமுகவை கண்டித்து அறிவித்த போராட்டம் ஒத்திவைப்பு – அறிவிப்பு வெளியிட்ட அதிமுக – காரணம் என்ன?
AIADMK Protest Postponed : சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஆளும் திமுக அரசு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி, அதனை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த போராட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை, நவம்பர் 16 : சென்னையில் நவம்பர் 17, 2025 அன்று நடைபெறவிருந்த அதிமுக (ADMK) போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் (SIR) பணிகளில் ஆளும் திமுக அரசு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி, அதனை கண்டித்து அதிமுக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில் நவம்பர் 17, 2025 அன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு எழும்பூர் ருக்மணி லக்ஷ்மிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அந்த அறிவிப்பு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் அறிவிப்பு குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
அதிமுக போராட்டம் ஒத்திவைப்பு
தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் எஸ்ஐஆர் பணிகளை திமுக தடுக்க முயல்வதாக கூறி அதிமுக சார்பில் சென்னையில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அக்கட்சியின் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒருபுறம் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் சரிபார்ப்பு பணிகளை திமுக தடுக்க முயல்கிறது. மற்றொரு பக்கம், திமுக அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை பலர் தங்கள் பதவியை பயன்படுத்தி எஸ்ஐஆர் பணிகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து அதிமுக சார்பில் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க : “2026 தேர்தலில் திமுக-தவெக இடையே மட்டும் தான் போட்டி”.. அடித்துச் சொல்கிறார் டிடிவி தினகரன்




இதற்கிடையில், சென்னை வானிலை ஆய்வு மையம் நவம்பர் 17, 20525 அன்று திங்கள்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, பொதுமக்களின் பாதுகாப்பையும், போராட்டத்தில் பங்கேற்கும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் எதிர்கொள்ளவிருக்கும் சிரமத்தையும் கருத்தில் கொண்டு, போராட்டத்தை ஒத்திவைக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போராட்டம் எப்போது?
இதன்படி, நாளை நடைபெறவிருந்த போராட்டம் நவம்பர் 20, 2025 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அதே இடமான எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாலகங்கா, அதிராஜாரம், விருகை ரவி, தி.நகர் சத்யா, அசோக், ராஜேஷ், புரசை பாபு, கண்டன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!
மற்றொரு பக்கம் எஸ்ஐஆருக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக மாவட்ட தலைநகர்களில் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை நவம்பர் 16, 2025 அன்று ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோவில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றால் நாம் வாக்குரிமையை இழக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தார் .