வாக்குரிமையை இழக்க நேரிடும்… எஸ்ஐஆர் குறித்து விஜய் வெளியிட்ட வீடியோ
Vijay Warns About SIR: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய் எஸ்ஐஆர் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு, வாக்குரிமை தொடர்பான எச்சரிக்கைகளை மக்களுக்கு கூறியுள்ளார். அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் தற்போது எஸ்ஐஆர் (SIR) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (Vijay), தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். எஸ்ஐஆர் தொடர்பான கூட்டங்களில் தவெக கட்சிக்கும் அழைப்பு வழங்கப்படவேண்டும் என்றும், தற்போது பயன்படுத்தப்படும் எஸ்ஐஆர் செயல்முறையில் உள்ள குறைபாடுகளையும் அவர் அதில் பதிவு செய்துள்ளார். இந்தக் கடிதத்துக்கு பின்னர், விஜய் எஸ்ஐஆர் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு, வாக்குரிமை தொடர்பான மிக முக்கியமான எச்சரிக்கைகளை மக்களுக்கு கூறியுள்ளார். அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
வாக்குரிமையை இழக்க நேரிடலாம்
தமிழக வெற்றிக் கழகதத்தின் தலைவர் விஜய் எஸ்ஐஆர் குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது, இந்திய அரசியல் சாசனம் நமக்கு கொடுத்திருக்கும் உரிமைகளில் மிக முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனிதன் உயிருடன் இருப்பதற்கான அடையாளம் வாக்குரிமை. வாக்கு என்பது உரிமை மட்டுமல்ல, நமது வாழ்க்கையும்கூட. தமிழ்நாட்டில் இப்போது யாருக்குமே வாக்களிக்கும் உரிமை இல்லை என்றால் நம்புவீர்களா? நான், நீங்கள் உள்பட யாருக்கும் இல்லை. இதுதான் நிஜம்.




இதையும் படிக்க : “தமிழ்நாடு தான் பாஜகவின் அடுத்த இலக்கு”.. நயினார் நாகேந்திரன் சூளுரை!
கொஞ்சம் ஏமாந்தால் நம்மைப்போல லட்சக்கணக்கான மக்களின் நிலை இதுதான். ஓட்டு போட முடியாத நிலை வந்தாலும் வரலாம். இதற்கு காரணம் எஸ்.ஐ.ஆர். கடந்த ஜனவரி மாதம் எடுத்த கணக்கெடுப்பில் வாக்காளர் பட்டியலில் 6.36 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவருக்குமே இப்போது வாக்குரிமை இல்லை. வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கொடுக்கும் படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டும். இதையெல்லாம் சரிபார்த்து வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். அதை வெளியிடும் வரை நமக்கு வாக்குரிமை இருக்கிறதா என்று சொல்ல முடியாது.
எஸ்ஐஆர் குறித்து விஜய் வெளியிட்ட வீடியோ
— TVK Vijay (@TVKVijayHQ) November 15, 2025
வாக்காளர்கள் அனைவருக்கும் ஒரே மாதத்தில் எஸ்ஐஆர் படிவம் எப்படி சென்று சேரும்? இந்த பணியால் அதிகம் பாதிக்கப்படப் போவது உழைக்கும் மக்கள், ஏழைகள், வேலைக்குச் செல்லும் பெண்கள்தான். புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கவிடாமல் செய்ய அனைத்து வேலைகளும் நடக்கிறது. ஜென் ஸி வாக்காளர்கள் படிவம் 6-ஐ கவனமுடன் நிரப்பி கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க : ‘SIR பணிகளுக்கு ஒரு மாத காலம் போதுமானது’.. சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி!!
வாக்குரிமை தொடர்பான மிக முக்கியமான எச்சரிக்கைகளை விஜய் வலியுறுத்தியுள்ளதால், எஸ்ஐஆர் செயல்முறை குறித்து பொதுமக்களிடையே பெரும் விவாதம் எழுந்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறும் இந்த காலகட்டத்தில், ஒவ்வொரு குடிமக்களும் எஸ்ஐஆர் படிவங்களை சரியாக பூர்த்தி செய்து, தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என உறுதிப்படுத்துவது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.