Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“SIR படிவத்தை பார்த்தாலே தலை சுற்றுகிறது”.. முதல்வர் ஸ்டாலின்!!

மத்திய அரசு, தேர்தல் ஆணையம் கொடுக்கும் அழுத்தத்தை மீறி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதோடு, வழக்கமாக கட்சியை வெற்றி பெற வைக்கும் பணி மட்டுமே நிர்வாகிகளுக்கு இருக்கும், இம்முறை, மக்களுடைய வாக்குரிமையைப் பெற்றுத் தரும் பொறுப்பும் கூடுதலாக உள்ளதாக கூறியுள்ளார்.

“SIR படிவத்தை பார்த்தாலே தலை சுற்றுகிறது”.. முதல்வர் ஸ்டாலின்!!
முதல்வர் மு.க.ஸ்டாலின்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 15 Nov 2025 06:53 AM IST

சென்னை, நவம்பர் 15: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (Special intensive revision) நிறைவுற இன்னும் 20 நாட்களே உள்ளதால், அனைத்து வாக்காளர்களும் முழுமையாக அந்த படிவத்தை நிரப்பி விண்ணப்பிக்க திமுகவினர் உதவ வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் இந்த பணி கடந்த நவ.4ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு, வீடாக சென்று விண்ணப்பங்ககளை வழங்கி வருகிறார்கள். தொடர்ந்து, டிச.4ம் தேதி இப்பணிகள் நிறைவு பெற உள்ளன. ஆனால், இந்த சிறப்பு திருத்த பணியில் குழப்பங்கள் இருப்பதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதோடு, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களில் ஒரு சிலருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய சூழல்:

இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்றைக்கு நாம் எங்கு சென்றாலும் SIR பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அதைப் பேசாமல் இருக்க முடியாது என்கிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும், ‘நாங்கள் இந்திய குடிமக்கள்தான்’ என்று நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில், கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். காரணம், தேர்தல் ஆணையம் அப்படிப்பட்ட ஒரு பெரும் சுமையை நம்மீது சுமத்தியிருக்கிறது.

இதையும் படிக்க : நெருங்கும் தேர்தல்: மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி!

மக்களின் வாக்குரிமையே பறிபோகும் அளவுக்கு ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை உருவாக்கியவர்கள் யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒன்றியத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் இதை உருவாக்கியிருக்கிறார்கள். எவ்வாறு, விசாரணை அமைப்புகளை வைத்து, பல்வேறு மாநிலங்களில் இருக்கும் ஆட்சிகளுக்கு இன்னல்களையும், துன்பங்களையும் தந்து கொண்டிருக்கிறார்களோ, அதேபோல் தேர்தல் ஆணையத்தையும் பயன்படுத்தி அப்படி ஒரு சூழ்நிலையை அவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே, நீங்கள் தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிப்படையாகவே வாக்குத் திருட்டைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை எடுத்துவைப்பது மட்டுமல்லாமல், ஆதாரங்களோடு அதைச் சுட்டிக்காட்டி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் உண்மையான வாக்காளர் ஒருவர்கூட வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறோம் என்றார்.

SIR படிவத்தை பார்த்தால் தலை சுற்றுகிறது:

மேலும் பேசிய அவர், நாம் வாக்காளராக சேருவதற்கு ஒரு படிவம் கொடுக்கிறார்கள். அந்த விண்ணப்பதை நாம் வாங்கிப் பார்க்கும் போது, நமக்குப் பெரிய குழப்பம் வருகிறது. தலை சுற்றுகிறது. தமிழ்நாடு அதுகுறித்து புலம்பிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, மேற்கு வங்கத்தில் முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி மிகப் பெரிய போராட்டங்களை நடத்தித் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அதேபோல், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆளுங்கட்சி மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் எதிர்க்கட்சியும் ஒன்றுசேர்ந்து போராட்டம் நடத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு அவர்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்கிறது. அது எதிர்க்கட்சியாக இல்லை. இப்படியே சென்றுக்கொண்டிருந்தால் எதிர்க்கட்சியாக மட்டுமல்ல. உதிரிக் கட்சியாக கூட இருக்க முடியாத ஒரு சூழ்நிலை நிச்சயம் ஏற்படும்.

SIR-ஐ எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு:

அதாவது தங்களுடைய கட்சியை டெல்லியில் கொண்டுசென்று அடமானம் வைத்துவிட்டு அந்த எஸ்ஐஆரை ஆதரித்து – அவர்கள் போட்டுக்கொண்டிருக்கும் நிபந்தனைகளை எல்லாம் ஏற்றுக்கொண்ட நிலையில் அவர்கள் அடமானம் வைத்திருக்கிறார்கள். அதை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்லா கட்சிகளும் உச்ச நீதிமன்றத்திக்குச் செல்கிறோம்.

இதையும் படிக்க : தேர்தலில் யாருடன் கூட்டணி? தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை!

ஆனால், இங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக அதை ஆதரித்து உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் வெட்கக் கேடு நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. மக்களை சந்திக்க அவர்களுக்கு தெம்பு இல்லை. அதனால்தான் இந்த குறுக்கு வழியை அவர்கள் நாடியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.