Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெருங்கும் தேர்தல்: மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி இதுவரை 5 கட்டங்களாக 172 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்து முடித்துள்ளார். தொடர்ந்து, தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மீண்டும் தனது சுற்றப்பயணத்தை தொடங்க அவர் முனைப்பு காட்டி வருகிறார். அதோடு, கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க மண்டல மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

நெருங்கும் தேர்தல்: மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி!
எடப்பாடி பழனிசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 14 Nov 2025 08:55 AM IST

சென்னை, நவம்பர் 14: 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்​களை ​காப்போம், தமிழகத்​தை மீட்​போம்’ என்​ற பிரச்​சா​ரப்​ பயணத்​தை கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தமிழகம் முழுவதும் இதுவரை 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் சுற்றுப்பயணத்தில் மொத்தம் 172 சட்டப்பேரவை தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து, அவர் நவம்பர் மாத இறுதியில் மீண்டும் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். ஏற்கெனவே, அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற குரல் கட்சியில் மீண்டும் ஓங்கியுள்ள நிலையில், அவர் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

மேலும் படிக்க: கரூர் வழக்கு… மின் தடை ஏற்படுத்தப்பட்டதா? மின்வாரிய ஊழியர்களிடம் சிபிஐ விசாரணை

நீடிக்கும் அதிமுக உட்கட்சி குழப்பம்:

இதனிடையே, அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று குரலெழுப்பிய செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதோடு, அவரது ஆதரவாளர்களும் அடுத்தடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியே தங்களது எதிரி என குரல் எழுப்பி வரும் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், சசிகலா ஆகியோர் ஒன்றாக ஓர் அணியில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தேர்தலில் இவர்கள் அனைவரும் ஒன்றாக இணையும் போது, அதிமுகவில் இருந்து மேலும் சில முக்கிய தலைவர்களும் விலகலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிமுகவின் பலம் வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தென் மாவட்டங்களில் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டங்கள் வைத்துள்ளாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மேலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அனைவரும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதேயே நோக்கமாக கொண்டுள்ளனர். அதாவது, அவர்கள் கூறுவது என்னவென்றால், எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்து விலகினால் தான் அதிமுக மீண்டும் வலுவாகும் என்றும், அதற்கான அனைத்து வேலைகளையும் தாங்கள் மேற்கொள்வோம் எனவும் கூறி வருகின்றனர்.

இபிஎஸ் மீண்டும் சுற்றுப்பயணம்:

இந்த சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி மீண்டும் இம்மாத இறுதியில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின், 5 இடங்களில் மண்டல மாநாடுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறும்போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுவரை 5 கட்டங்களாக 172 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்து முடித்துள்ளார்.

இதற்கிடையே தீபாவளி பண்டிகை, வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. இந்நிலையில், மீதமுள்ள 62 தொகுதிகளில் சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. எப்போது இருந்து தொடங்குவது? எந்தெந்த தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வது என்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றனர்.

மேலும் படிக்க : இயற்கை வேளாண்மை உச்சி மாநாடு.. கோவை வரும் பிரதமர் மோடி.. எத்தனை நாள் பயணம்? நோக்கம் என்ன?

234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து முடித்தபின், அடுத்தகட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மதுரை, கோவை, திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 5 இடங்களில் பிரம்மாண்டமான முறையில் மண்டல மாநாடுகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.