பல நோய்களுக்கு இயற்கை தீர்வு தரும் பாரம்பரிய மூலிகைகள் என்னென்ன?
Traditional Herbal Remedies: தமிழகத்தில் பரம்பரையாக பயன்படுத்தப்பட்டு வரும் சங்கு புஷ்பம், கீழாநெல்லி, நெருஞ்சில், கற்றாழை, கண்டங்கத்திரி போன்ற மூலிகைகள் பல்வேறு நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகின்றன. பாரம்பரிய மூலிகைகள் பல நோய்களுக்கு இயற்கை தீர்வாக உள்ளன. உடலைக் குளிர்வித்து, ஜீரணத்தை மேம்படுத்துகின்றன.
மூலிகைகளின் மருத்துவ மகத்துவம்
தமிழகத்தில் பரம்பரையாக பயன்படுத்தப்பட்டு வரும் சங்கு புஷ்பம், கீழாநெல்லி, நெருஞ்சில், கற்றாழை, கண்டங்கத்திரி போன்ற மூலிகைகள் பல்வேறு நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகின்றன. இவை அனைத்தும் இயற்கைச் செல்வங்களாகக் கருதப்படுகின்றன. இலை, தண்டு, பூ, வேர் போன்ற அனைத்து பகுதிகளும் மருத்துவப் பயன்கள் கொண்டவை. கஷாயமாகவும், தூளாகவும், சாறாகவும், எண்ணெயாகவும் பயன்படுத்தி பல நோய்களை கட்டுப்படுத்த முடிகிறது. உடலைக் குளிர்வித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் நலத்தை மேம்படுத்தும் திறன் இம்மூலிகைகளுக்கு உள்ளது.
சங்கு புஷ்பத்தின் நன்மைகள்
சங்கு புஷ்பம் (Clitoria ternatea) இலை, தண்டு, பூ, வேர் ஆகிய அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. கஷாயமாக 50 மில்லி அளவில் குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். சுரம், நரம்பு நோய்கள், வலிப்பு நோய்களுக்கு பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழித்து பசியை தூண்டும். துளசி இலைகளுடன் சேர்த்து காய்ச்சி குடித்தால் சீதபேதி, பேதி, அஜீரணம் குணமாகும். எண்ணெயில் இலை, பூ, தண்டுகளை காய்ச்சி தடவினால் முடி நன்கு வளரும்.
கீழாநெல்லியின் சிறப்புகள்
கீழாநெல்லி (Phyllanthus niruri) மஞ்சள் காமாலை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பூமியிலிருந்து எடுத்து சுத்தம் செய்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் விரைவான பலன் கிடைக்கும். சிறுநீர் பெருக்கும், ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும், உடலைக் குளிர்விக்கும். கீழாநெல்லிச் சாற்றை எண்ணெயில் கலந்து புண்களில் தடவினால் ஆறும். தோல்வியாதிகளுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
Also Read: கோடைகாலம் தொடங்குது? தினமும் வெந்நீர் குடிப்பது சரியானதா?
நெருஞ்சிலின் மருத்துவ குணங்கள்
நெருஞ்சில் (Tribulus terrestris) இலை, பூ, தண்டு, பழம், வேர் அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. சிறுநீர் தடையை நீக்கி, சிறுநீரகக் கற்களை வெளியேற்ற உதவுகிறது. மூட்டுவலி, வீக்கம் குறைக்கிறது. இதய நோய்கள், இருமல், ரத்த அழுத்தம், கெட்ட கொலஸ்டிரால் குறைக்க உதவுகிறது. பெண்களுக்கான சிஸ்டு பிரச்னைகளுக்கும் நிவாரணம் தருகிறது.
கற்றாழையின் பலன்கள்
கற்றாழை (Aloe vera) மலக்குடல் பிரச்னைகள், உடல் எரிச்சல், சிறுநீர்க் கோளாறுகள், புராஸ்டேட் பிரச்னைகள் உள்ளிட்ட பல குறைபாடுகளுக்கு மருந்தாக உள்ளது. உடலைக் குளிர்வித்து, வாயு அகற்றி, வயிற்று வலியை போக்குகிறது. மாதவிடாய் சீர்குலைவு பிரச்னைகளையும் சரிசெய்கிறது. கற்றாழைச் சாறு புண்களுக்கு பூசினால் எரிச்சல் குறைந்து விரைவில் ஆறும்.
கண்டங்கத்திரியின் பயன்பாடு
கண்டங்கத்திரி (Solanum xanthocarpum) சிறுநீர் பெருக்கும், சளி வெளியேற்றும், சுரம் போக்கும். வாதவலி, வீக்கம், இருமல், ஆஸ்துமா, நெஞ்சுவலி போன்ற பிரச்னைகளுக்கு கஷாயமாக குடிக்கலாம். இலை, பூ, காய், பழம், வேர் அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை. மூத்திரப்பையை சுத்திகரித்து உடல்நலத்தை மேம்படுத்துகிறது.