ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு மல்லை சத்யா.. குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த வைகோ..
Vaiko On Mallai Sathya Allegations: மல்லை சத்யாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜமுக்காலத்தில் வடுகட்டிய பொய். எனது நேர்மையை உலகறிந்தது. ஜென்ம எதிரிகள் கூட இப்படி ஒரு குற்றச்சாட்டை சொல்லியதில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மல்லை சத்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார்.
சென்னை, நவம்பர் 18, 2025: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பு சொத்து இருப்பதாக மல்லை சத்யா பகிரங்கமாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யா ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப் பாம்பு எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மதிமுகவைப் பொருத்தவரையில் பொதுச்செயலாளர் வைகோவும் மல்லை சத்யாவுக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர்.
மல்லை சத்யா முன் வைத்த குற்றச்சாட்டுகள்:
அந்த வகையில், சென்னையில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த மல்லை சத்யா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது பேசிய அவர்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவிற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ரூ.250 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. வைகோவின் உறவினர்கள் மதுபான ஆலைகளை நடத்தி வருகின்றனர்;
மேலும் படிக்க: அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை.. எத்தனை நாட்களுக்கு?
அதன் மூலம் அவரது குடும்பத்தினருக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. அந்தப் பணத்தை வைத்து தான் அவர்கள் புதிய வீடு கட்டியுள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுபானத்திற்கு எதிராக நடைப்பயணம் மேற்கொண்டு வருவது ஒரு பக்கம் இருந்தாலும், அவரது உறவினர்கள் மதுபான ஆலையை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டில் பிரம்மாண்டமான அரண்மனை:
செங்கல்பட்டில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தில், சுமார் 5 கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமான அரண்மனை போன்ற வீட்டை அவர் கட்டியுள்ளார். இது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக ரகசியமாக புதுமனை புகு விழாவும் நடத்தப்பட்டுள்ளது. துரை வைகோவுக்கு மத்திய அமைச்சராக வேண்டுமென்ற ஆசை இருப்பதால், வைகோ தற்போது பாஜகவுடன் இணைந்து செயல்பட நினைக்கிறார் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: அதிகனமழை இருக்காது.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை மட்டும் தான் இருக்கும் – பிரதீப் ஜான்..
ஆலங்கால விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு – வைகோ பதில்:
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மல்லை சத்யாவை கடுமையாக விமர்சித்துள்ளார். அப்போது பேசிய அவர், “மல்லை சத்யாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜமுக்காலத்தில் வடுகட்டிய பொய். எனது நேர்மையை உலகறிந்தது. ஜென்ம எதிரிகள் கூட இப்படி ஒரு குற்றச்சாட்டை சொல்லியதில்லை. ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப் பாம்புதான் மல்லை சத்யா” என குறிப்பிட்டு உள்ளார்.