Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணைகிறார் செங்கோட்டையன்!!

அரசியலில் எம்ஜிஆர் காலம் முதல் அனுபவம் கொண்ட தனக்கு முக்கிய பதவி வேண்டும் என்பதில், செங்கோட்டையன் உறுதியாக இருந்ததாக தெரிகிறது. அதோடு, தவெகவில் இணையும் பட்சத்தில் அக்கட்சியில் தான் மூத்த தலைவராக இருப்பதால், முக்கிய பொறுப்புகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணைகிறார் செங்கோட்டையன்!!
விஜய், செங்கோட்டையன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 Nov 2025 10:35 AM IST

சென்னை, நவம்பர் 27: முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் இன்று தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகிறார். இதையொட்டி, நேற்று அவர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியலில் பல்வேறு திருப்பங்களும், பரபரப்புகளும் காணப்படுகிறது. முக்கியமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, இந்த முறை பல்வேறு திருப்பங்களுக்கு வழிவகுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் இதுவரை திமுக, அதிமுக என்ற இரண்டு பெரும் கட்சிகளை வைத்து மட்டுமே அரசியல் நகர்வுகள் இருந்து வந்த நிலையில், மூன்றாவது அணி பலமாக உருவாகி வருவதாக பலரும் கூறுகின்றனர். அந்தவகையில், தவெகவில் செங்கோட்டையன் இணையும் நிலையில், அக்கட்சியில் இருக்கும் அனைத்து நிர்வாகிகளை விடவும் செங்கோட்டையனே மூத்த தலைவராக இருப்பார். இதனால், அவருக்கு அக்கட்சியில் என்ன பதவி, பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் படிக்க : அதிமுகவை விட இரண்டரை மடங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளோம் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..

திமுகவில் இணைய செங்கோட்டையனுக்கு அழைப்பு?

முன்னதாக, நேற்றைய தினம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய செங்கோட்டையன் தலைமைச் செயலகம் சென்றிருந்தார். அங்கு தனது கோபிச்செட்டிபாளையம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் வழங்கினார். தொடர்ந்து, அங்கிருந்த அமைச்சர் சேகர்பாபு செங்கோட்டையனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, திமுகவில் சேருமாறு செங்கோட்டையனுக்கு சேகர்பாபு அழைப்பு விடுத்ததாகவும் ஆனால் செங்கோட்டையன் ‘பிடி கொடுக்காமல்’ இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக தவெக பலமான கட்சியாக உருவெடுத்துவிடக் கூடாது என்பதற்காக, அவருடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. எனினும், தான் எடுத்த முடிவில் செங்கோட்டையன் உறுதியாக இருந்துவிட்டதாக தெரிகிறது. இதனால், நேற்று பிற்பகல் வரை அவருடன் திமுகவினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

விஜய் வீட்டில் பேச்சுவார்த்தை:

தொடர்ந்து, நேற்று மாலை தவெக தலைவர் விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று செங்கோட்டையன் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது, தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பொறுப்பு கொடுப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான தனது நிலைப்பாடு, தேர்தலுக்கு அவர் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் ஆகியவை குறித்த ஆலோசனைகளையும் செங்கோட்டையன் அவருக்கு வழங்கியதாகவும், சுமார் 2 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய பொறுப்பு கேட்ட செங்கோட்டையன்:

அரசியலில் எம்ஜிஆர் காலம் முதல் அனுபவம் கொண்ட தனக்கு முக்கிய பதவி வேண்டும் என்பதில், செங்கோட்டையன் உறுதியாக இருந்ததாக தெரிகிறது. அதோடு, தவெகவில் இணையும் பட்சத்தில் அக்கட்சியில் தான் மூத்த தலைவராக இருப்பதால், ஏற்கெனவே அதிமுகவில் இருந்து வந்த நிர்மல்குமார் உள்ளிட்டோரை விட தனக்கு முக்கிய பொறுப்புகளும், அதிகாரமும் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுகொகண்டுதாகவும் கூறப்படுகிறது. அதோடு, தன்னுடன் அதிமுகவில் இருந்த முக்கிய தலைவர்களையும் அழைத்து வருவதாக அவர் வாக்குறுதி வழங்கியதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : எத்தனை நாட்கள் தமிழை வைத்து ஏமாற்றுவார்கள்? தோல்வி அடைந்த ஆட்சி திமுக ஆட்சி – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்..

இன்று தவெகவில் இணைகிறார் செங்கோட்டையன்:

அந்தவகையில், செங்கோட்டையன் போன்ற அனுபவம் மிக்க தலைவர் தவெகவில் இணைவது கட்சிக்கு வலு சேர்க்கும் என்பதால், செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச் செயலாளர் பதவி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து, பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன், முன்னாள் எம்.பி சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன் உள்ளிட்டோரும் அவது தலைமையில் தவெகவில் இணைய உள்ளதாக தெரிகிறது.