விஜய்யுடன் காங்கிரஸ் மூத்த நிர்வாகி பேச்சுவார்த்தை.. தமிழக அரசியலில் பரபரப்பு!!
AICC leader meets Vijay: ஏற்கெனவே, தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது மேலும் ஒரு தேசிய தலைவர் அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதன் மூலம் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
சென்னை, டிசம்பர் 06: காங்கிரஸ் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி (Praveen Chakravarty) நேற்று சென்னையில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமெடுத்துள்ளன. அந்தவகையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்த முறை தவெகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இத்தகவலை திட்டவட்டமாக மறுத்திருந்தார்.
அதேசமயம், தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்திருந்தது. இந்த குழு அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சென்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் மூலம் கூட்டணி குறித்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறிய செல்வப்பெருந்தகை, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: விஜய்யின் பொதுக்கூட்டம் எப்போ தெரியுமா? அனுமதி கேட்டு தவெக சார்பில் விண்ணப்பம்




ஆட்சியில் பங்கு என்ற விஜய்யின் அறிவிப்பு:
இதனிடையே, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக சட்டசபை தேர்தலில் களம் காண உள்ளது பல்வேறு கட்சிகளுக்கும் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. ஏனெனில், தங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்குதரப்படும் என அவர் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இது தமிழகத்திற்கு முற்றிலும் புதிய அறிவிப்பு தான். இதுவரை இங்கு ஆண்ட கட்சிகள் யாரும், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கியது இல்லை. இந்நிலையில், விஜய்யின் இந்த அறிவிப்பால், இம்முறை அக்கட்சியுடன் பல கட்சிகள் கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்பட்டது. அதோடு, திமுக, அதிமுக உடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் நிச்சயம் அதிகாரப்பகிர்வு குறித்து, வலியுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்?
அந்தவகையில், திமுக கூட்டணியில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் வெளிப்படையாகவே, அதிகாரப்பகிர்வு கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். இந்த சமயத்தில் தான் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? அல்லது தவெகவுடன் இம்முறை காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விகள் எழுந்தன. ஏனெனில், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேசிய காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஐவர் குழு அமைக்கப்பட்டதை சுட்டி காட்டி, திமுக – காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இருப்பதாக செல்வப்பெருந்தகை கூறி வந்தார்.
விஜய்யுடன் பரவீன் சக்கரவர்த்தி பேச்சுவார்த்தை:
இந்நிலையில், ராகுல் காந்தியிடன் நெருக்கம் காட்டும் முக்கிய நிர்வாகியும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரவீன் சக்கரவர்த்தி, சென்னையில் நேற்று தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பரவீன் சக்கரவர்த்தி காங்கிரஸ் எம்.பியும், ராகுல் காந்தியின் ஆலோசகராகவும், அக்கட்சியின் தகவல் பிரிவு தேசிய தலைவராகவும் இருந்து வருகிறார். இப்படி, தேசிய காங்கிரஸில் பல்வேறு முக்கிய பதவிகளை வகிக்கும் பரவீன் சக்கரவர்த்தி, விஜய்யை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இதையும் படிக்க : “அமித்ஷா அழைத்தாலும் செல்ல மாட்டேன்”.. டிடிவி தினகரன் திட்டவட்டம்!!
திமுக கூட்டணியில் இருந்து விலகும் காங்கிரஸ்?
இதன் மூலம் விஜய்யுடனான பேச்சுவார்த்தைக்கு பிரவீன் சக்கரவர்த்தியை ராகுல் காந்தியே அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. அதோடு, புதுச்சேரி மற்றும் கேரளாவுக்கு அடுத்தடுத்து சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், விஜய்யின் செல்வாக்கை வைத்து காங்கிரஸ் கணக்கு போடுவதாகவும் கூறப்படுகிறது. அதோடு, ஏற்கெனவே, தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு தலைவர் அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதன் மூலம் இம்முறை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் அணி மாறுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.