“அமித்ஷா அழைத்தாலும் செல்ல மாட்டேன்”.. டிடிவி தினகரன் திட்டவட்டம்!!
Thiruparankundram issue: திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ வேண்டும் என்பதே அமமுகவின் நிலைப்பாடு என கூறியுள்ளார். மேலும், மதத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ, திருவிழாக்களின் பெயராலோ, யாரும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.
சென்னை, டிசம்பர் 05: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்னை சந்திக்க அழைக்க மாட்டார், அவ்வாறு அழைத்தாலும் செல்ல மாட்டேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அமமுக அண்மையில் கூட்டணியில் இருந்து வெளியேறியது. குறிப்பாக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற சில நாட்களில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அதோடு, ஏற்கெனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன் தனக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். தொடர்ந்து, அண்ணாமலையே தங்களை கூட்டணிக்கு அழைத்து வந்ததாகவும், நாளை ஓபிஎஸ்–க்கு நடந்ததுதான் தனக்கும் நடந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் டிடிவி தினகரன் காரணம் கூறியிருந்தார்.
மேலும் படிக்க: 2வது முறையும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு.. திருப்பரங்குன்றத்தில் நீடிக்கும் பதற்றம்!
அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்:
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து விலகினாலும் பாஜக மூத்த தலைவர்களுடன் இணக்கமாக இருந்து வந்தனர். அந்தவகையில், அண்ணாமலை இவர்கள் இருவரையும் அடிக்கடி சந்தித்து ஆலோசிப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அப்படி, சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்தார். அவரது சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பியபோது, பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்று பட வேண்டும் என்பதற்காகவே நான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தினேன். அதிமுக தொண்டர்களின் எண்ணத்தையும் அவரிடம் எடுத்துக் கூறினேன் என்றார்.
அமித்ஷா அழைத்தாலும் செல்லமாட்டேன்:
அந்தவகையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம், தாங்களும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தப்பீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நான் அமித்ஷாவை சந்திப்பதற்கான வாய்ப்பு உறுதியாக இல்லை. என்னை அழைக்கவும் மாட்டார்கள். நானும் சந்திக்க மாட்டேன். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை, தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணையாது. அதிமுகவை அமித்ஷா இயக்குகிறாரா என்று தெரியாது என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.
தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்:
சாதி, மத அரசியலை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறிய அவர், திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்துக்கு இடையூறு செய்யும் வகையில் அரசியல் கட்சிகள் செயல்படக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். மேலும், தமிழ்நாட்டில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாக கூறிய அவர், தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்திற்கும், பொது அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்த எந்த இயக்கம் நினைத்தாலும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள் என்றார்.
மேலும் படிக்க: “தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் திமுக அரசு”.. எடப்பாடி பழனிசாமி தாக்கு!!
மேலும், மதத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ, திருவிழாக்களின் பெயராலோ, யாரும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும், அவ்வாறு மதத்தின் பெயரால் அரசியல் செய்வதை தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். அதோடு, தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ வேண்டும் என்பதே அமமுகவின் நிலைப்பாடு என்றும் கூறினார்.



