Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தொடங்கியது கூட்டணி பேச்சுவார்த்தை.. முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் ஐவர் குழு!!

2026 assembly election: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகளின் செயல்பாடு தீவிரமெடுத்துள்ளது. அந்தவகையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தங்களது கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. அடுத்தடுத்து டிசம்பர் மாத இறுதிக்குள் பல்வேறு கட்சிகளும் தங்களது கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடங்கியது கூட்டணி பேச்சுவார்த்தை.. முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் ஐவர் குழு!!
காங்கிரஸ் - திமுக கூட்டணி பேச்சுவார்த்தை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 03 Dec 2025 14:33 PM IST

சென்னை, டிசம்பர் 03: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு..ஸ்டாலினை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான காங்கிரஸ் ஐவர் குழு சந்தித்துள்ளது. தமிழகத்ததில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன்படி, இக்குழுவில் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை, எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த குழு இன்று அண்ணா அறிவாலயத்தில் மு..ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

முன்னதாக, திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. குறிப்பாக தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இக்குழு அமைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இக்குழு திமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்டதா என்பது குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது. ஒருவேளை திமுகவுடன் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், காங்கிரஸின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மேலும் படிக்க: அந்த கனவை நொறுக்கி விட்டீர்கள்…. கோபியில் செங்கோட்டையனை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

பீகார் தேர்தலில் பின்னடைவை சந்தித்த காங்கிரஸ்:

அந்தவகையில், புதிதாக அமைக்கப்பட்ட காங்கிரஸ் ஒருங்கிணைப்பு குழு தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்த முறை தமிழகத்தில் அதிக தொகுதிகளை கேட்டு பெற வேண்டும என தமிழக தலைவர்கள் பலரும் கூறி வந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தல் தோல்வி அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. ஒருவேளை பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்திருந்தால், இங்கும் அவர்கள் உரிமையை கேட்டு பெற வேண்டிய இடத்தில் இருந்திருக்கலாம். ஆனால், தற்போது நிலைமை வேறு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

40 தொகுதிகளை கேட்க முடிவு:

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இதனால் இம்முறை எத்தனை தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கோரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதோடு, 40 தொகுதிகளை கேட்டுப்பெற வேண்டும் என முன்னதாக நிர்வாகிகள் வலியுறுத்தியிருந்தனர். ஆனால், தற்போது காங்கிரஸ் இருக்கும் நிலையில், கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை விட, இம்முறை குறைவாக ஒதுக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க:2026ல் மக்களின் ஆதரவுடன் “விஜய் ஆட்சிக்கு வருவார்”.. செங்கோட்டையன் உறுதி!!

மரியாதை நிமித்த சந்திப்பு:

இந்நிலையில், முதலமைச்சர் மு..ஸ்டாலினை சந்தித்த பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுககாங்கிரஸ் கூட்டணி உறுதியுடன் இருப்பதை இன்றைய சந்திப்பு பறைசாற்றியுள்ளதாக கூறிய அவர், கூட்டணி தொடர்பான அனைத்து விதமான சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், திமுக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து நான்கைந்து வெற்றிகளை பெற்ற கூட்டணி என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.