2026-ல் கைக்கோர்க்கும் பாமக – தவெக? போராட்டத்தில் கலந்துக்கொள்ள நேரில் அழைப்பு..
PMK - TVK: பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் நிர்வாகிகள் சென்னை பனையூரில் இருக்கும் தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்துக்கு சென்று, இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பிதழை நேரில் வழங்கினர். வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாமக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கைகோர்க்கக்கூடும் என யூகங்கள் வெளியாகி வருகின்றன.
சென்னை, டிசம்பர் 11, 2025: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி, டிசம்பர் 17, 2025 அன்று நடைபெற உள்ள மாநில அளவிலான போராட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் பங்கேற்குமாறு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து இந்த அழைப்பை வழங்கினர். இது ஒரு பக்கம் இருந்தாலும், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: தொகுதி பங்கீடா? எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!
இந்த சூழலில் பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் தமிழக வெற்றிக்கழகத்தினருக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தலை இரு கட்சிகளும் ஒன்றாக சந்திக்கக்கூடும் எனும் யூகங்களும் வெளியாகி வருகின்றன.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பாமக போராட்டம்:
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும், அதை நடத்த மறுக்கும் திமுகவை கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள திமுகவைத் தவிர அனைத்து கட்சிகளுக்கும் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில், “சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க வேண்டியதன் தேவையை அனைவரும் நன்கு அறிவீர்கள். சமூகத்தின் நிலையை அறிய உதவும் எக்ஸ்-ரே கருவி போல செயல்படுவது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு கடந்த 15 ஆண்டுகளாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது,” போன்ற பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தவெகவிற்கு அழைப்பு கொடுத்த பாமக பாலு:
இந்த சூழலில், பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் நிர்வாகிகள் சென்னை பனையூரில் இருக்கும் தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்துக்கு சென்று, இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பிதழை நேரில் வழங்கினர். இதுகுறித்து பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களிடம் பேசியபோது, “சாதிவாரி கணக்கெடுப்பை தொடர்ந்து வலியுறுத்தி வரும் விஜய் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் என நம்புகிறோம். அதற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது,” என தெரிவித்தார்.
இது ஒரு பக்கம் இருக்க, வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாமக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கைகோர்க்கக்கூடும் என யூகங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கப்படவில்லை. இந்த அழைப்பு, பாமகவின் சமூக நீதி கோரிக்கையை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.