நெருங்கும் சட்டசபை தேர்தல்: நேற்று அதிமுக பொதுக்குழு.. இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்!!
TN Assembly elections: தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. நிரப்பப்பட்ட படிவங்களை திருப்பி அளிக்க இன்று கடைசி நாளாகும். டிசம்பர் 16ல் வரைவு பட்டியல் வெளியாக உள்ளது. இச்சூழலில், அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு விறுவிறுப்பாக தயாராகி வருகின்றன.
சென்னை, டிசம்பர் 11: 2026 சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிசம்பர் 15 முதல் 23 வரை விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார். இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களும், பரபரப்புகளும் காணப்படுகிறது. முக்கியமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, இந்த முறை பல்வேறு திருப்பங்களுக்கு வழிவகுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் இதுவரை திமுக, அதிமுக என்ற இரண்டு பெரும் கட்சிகளை வைத்து மட்டுமே அரசியல் நகர்வுகள் இருந்து வந்தது. அதன்பின், மூன்றாவதாக சீமானின் நாதக இருந்தாலும் மக்களிடையே உரிய செல்வாக்கை அக்கட்ச பெறவில்லை. இதனால், பலமான மூன்றாவது அணியாக தவெக உருவாகி வருவதாக பலரும் கூறுகின்றனர். அக்கட்சி யாருடன் கூட்டணி அமைக்க உள்ளது, யாரது கூட்டணியை உடைக்க உள்ளது என்றெல்லாம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிக்க : ஊழல் பட்டியலில் உள்ள திமுகவினருக்கு அதிமுக ஆட்சியில் தண்டனை…எடப்பாடி ஆவேசம்!
பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத தேர்தல்:
இதனிடையே, தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. நிரப்பப்பட்ட படிவங்களை திருப்பி அளிக்க இன்று கடைசி நாளாகும். டிசம்பர் 16ல் வரைவு பட்டியல் வெளியாக உள்ளது. இச்சூழலில், அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு விறுவிறுப்பாக தயாராகி வருகின்றன. அந்தவகையில், அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைப்பதிலும், சுற்றுப்பயணம் செய்வதிலும் வீயூகம் வகுத்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, விஜய் அரசியல் வருகையால் தேர்தல் களம் இம்முறை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத அளவு இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தற்போது ஆட்சியில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்துவதால், தமிழகத்தில் பெரும் கட்சியாக உள்ள திமுக, அதிமுகவுக்கு இது கட்டாயம் பெரும் சிக்கலாக அமையும் என்று கூறப்படுகிறது.




விருப்ப மனு கோரும் அதிமுக:
தொடர்ந்து, அடுத்த மாத இறுதிக்குள் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியை இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், தமிழகம் முழுவதும் பரபரக்கும் பொதுக்கூட்டங்களும், தீவிர வாக்குச்சேகரிப்பும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 11) சட்டசபை தேர்தல் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டசபை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை.. என்டிஏ கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ், டிடிவி?
டிசம்பர் 23ம் தேதி கடைசி தேதி:
அதோடு, டிசம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும். தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து, டிசம்பர் 15ம் தேதி நண்பகல் 12 மணியில் இருந்து விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும். படிவங்களில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து, கட்சியின் தலைமையிடம் வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.