ஊழல் பட்டியலில் உள்ள திமுகவினருக்கு அதிமுக ஆட்சியில் தண்டனை…எடப்பாடி ஆவேசம்!
Edappadi k. Palaniswami Speech: பல்வேறு ஊழல் பட்டியலில் இடம் பெற்றுள்ள திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு 2026- இல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தண்டனை பெற்று தரப்படும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆவேசமாக தெரிவித்தார் .
சென்னை, வானகரம் பகுதியில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று புதன்கிழமை (டிசம்பர் 10) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று பேசியதாவது: அமைதி, வளர்ச்சி, வளம் என்ற கொள்கை அதிமுகவின் தாரக மந்திரம் ஆகும். எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரும் பல தரப்பு மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை தந்தனர். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது என்பதால் நாட்டு மக்களையை வாரிசாக பார்த்தனர். மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியதால் அதிமுகவை யாராலும் தொட்டுப் பார்க்க முடியவில்லை. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
எதிர்க்கட்சியோடு கைகோர்த்த சட்டமன்ற உறுப்பினர்கள்
முந்தைய காலத்தில் அதிமுகவின் ஆட்சியை எந்த கட்சியாலும் குறை கூற முடியவில்லை. சட்டமன்றத்தில் நம்மோடு இருந்தவர்கள் எதிர்க்கட்சியோடு கைகோர்த்துள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும். அதிமுக பாஜகவோடு கூட்டணி என்று தான் கூற முடியுமே தவிர, ஆட்சியில் குறை கூற முடியாத அளவுக்கு ஆட்சி செய்தோம். தமிழகத்தில் அதிமுக தொழில் முதலீடுகளை குவித்துள்ளது. திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணம் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: திமுகவுக்கு எதிராக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்…என்ன அது!
வறுமையால் உடல் உறுப்புகள் விற்கும் நிலை
நெசவாளர்கள் வறுமையில் வாடி உடல் உறுப்புகளை விற்கும் அவல நிலை திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினரின் மருத்துவமனையில் உடல் உறுப்பு விற்பனை நடைபெற்றது. அதிமுக ஆட்சி அமைந்த பிறகு உடல் உறுப்பு விற்பனை விவரத்தில் முறையான நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக, திமுக ஆட்சியின் வேறுபாட்டை பாருங்கள். அதிமுக ஆட்சியில் தொழில்துறை சிறப்பாக இருந்தது.
திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு
திமுக ஆட்சியில் 77 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக திமுக அமைச்சர் பொய் கூறியுள்ளார். அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி உள்ளது. சாலை மற்றும் நீர் கட்டமைப்பை அதிமுக ஆட்சியில் மேம்படுத்தப்பட்டது. திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. தரமற்ற நூலில் வேஷ்டி, சேலைகள் வழங்கியுள்ளனர். திமுவில் உள்ள துரைமுருகன், கே.என்.நேரு, எ.வே.வேலு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, ரகுபதி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன.
ஊழல் பட்டியலில் உள்ளவர்களுக்கு அதிமுக ஆட்சியில் தண்டனை
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு, சிவகங்கை கொலை வழக்கு உள்ளிட்டவற்றில் முக்கியமான நபரை காப்பாற்றுவதற்கு திமுக அரசு துடிக்கிறது. எஸ். ஐ. ஆர் பணியை கேட்டாலே மு க ஸ்டாலினுக்கு நெஞ்சம் பதறுகிறது. ஏனென்றால், போலி வாக்குகள் பெற்று ஆட்சிக்கு வந்தது வெட்ட வெளிச்சம் ஆகிவிடும் என்பதற்காக தான். திமுகவினர் பலர் பேர் ஊழல் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு அதிமுக ஆட்சி அமைந்த உடன் தண்டனை பெற்று தரப்படும்.
மேலும் படிக்க: “அதிமுக உஷாராக இருக்க வேண்டும்”… பொதுக்குழுவில் எச்சரித்த சி.வி.சண்முகம்!!



