வீடு இல்லாதவர்களுக்கு மெரினா கடற்கரையில் இரவு நேர காப்பகம்.. விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!
Chennai Marina Night Shelter | சென்னை மெரினா கடற்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் சாலையில் தூங்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நிலையில், இரவு நேர காப்பகம் கட்டப்பட்டு வருகிறது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
சென்னை, டிசம்பர் 15 : சென்னையின் (Chennai) மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது தான் மெரினா கடற்கரை (Marina Beach). இங்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். உலக அளவில் சிறப்பு வாய்ந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக மெரினா கடற்கரை உள்ள நிலையில், அதனை உலக தரம் வாய்ந்ததாக மாற்றும் பணிகளை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது. அந்த வகையில், மெரினா கடற்கரையில் பல்வேறு சேவைகள் மற்றும் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், வீடு இல்லாதவர்களுக்கான அசத்தல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
வீடு இல்லாதவர்களுக்கு இரவு நேர தங்குமிடம்
மெரினா கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் வீடு இல்லாமல் சாலையில் படுத்து உறங்குகின்றனர். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என பலரும் இவ்வாறு வீடு இல்லாமல் சாலையில் தூங்கும் நிலையில் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வந்தது. இது குறித்து சென்னை மாநகராட்சியின் கவனத்திற்கு சென்ற நிலையில், மெரினா கடற்கரையில் வீடு இல்லாதவர்கள் இரவு நேரங்களில் தங்க இரவு நேர காப்பகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க : ஆணவத்தோடு வந்தால் அடிபணிய மாட்டோம்.. பாஜகவை சாடிய முதலமைச்சர்!




2,400 சதுர அடியில் புதிய இரவு நேர காப்பகம்
அதன்படி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கம் அருகே உள்ள காலி இடத்தில் சுமார் 2,400 சதுர அடியில் புதிய இரவு நேர காப்பகம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. ரூ.86 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் இந்த காப்பகம் கட்டப்பட்டு வந்தது. இந்த காப்பகத்தின் பணிகள் ஓரளவு நிறைவு பெற்றுள்ள நிலையில், சுற்று சுவர் மற்றும் நடைபாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க : கட்டுப்பாடற்ற கூட்டத்தை வைத்து எதுவும் சாதிக்க முடியாது – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
காப்பக பராமரிப்பு பணிகளை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு இரவு உணவு அம்மா உணவகத்தின் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு 2025, டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த காப்பகம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.