சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு: கையில் வாக் ஸ்டிக்குடன் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜரான ஜெம் வீரமணி..
Gem Veeramani - Pocso Case: வீரமணிக்கு எதிராக மேலும் 2 பேர் புதிதாக புகார் அளித்துள்ளனர். அந்தப் புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இதையடுத்து விசாரணைக்காக வீரமணியை சென்னையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அக்டோபர் 7, 2026: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்கொடுமை அளித்ததாக கூறப்படும் வழக்கில், ஜெம் கிரானைட் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி இன்று சென்னை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக வீரமணி உள்ளிட்ட 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை – வீரமணி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு:
ஜெம் கிரானைட் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி, சிறுமிகள் மற்றும் இளம் பெண்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் சாந்தி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில் 4 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் அளித்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
வீரமணிக்கு எதிராக இதுவரை 15-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை நிலவரம் என்ன?
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்பதற்காக காவல்துறை சார்பில் பிரத்யேக தொடர்பு எண் 9345319676 வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்ணில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு தெரிந்தவர்கள் தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெம் வீரமணி:
இந்த நிலையில், வீரமணிக்கு எதிராக மேலும் 2 பேர் புதிதாக புகார் அளித்துள்ளனர். அந்தப் புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இதையடுத்து விசாரணைக்காக வீரமணியை சென்னையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
முன்னதாக, வழக்கு விசாரணையின்போது காணொளி காட்சி வாயிலாக வீரமணியிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இன்று அவர் நேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: திருவொற்றியூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – பீகார் இளைஞர் போக்சோவில் கைது
வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேலும் யாருக்கேனும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதா, பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் பின்னணி மற்றும் சம்பவங்கள் தொடர்பான கூடுதல் ஆதாரங்கள் உள்ளனவா என்பது குறித்தும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.