Koyembedu: கோயம்பேட்டில் அரசு பேருந்து திருட்டு.. ஆந்திராவில் மீட்ட போலீசார்!
Chennai Crime News: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று திருடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், ஆந்திராவின் நெல்லூர் அருகே பேருந்து கண்டுபிடிக்கப்பட்டது. ஒடிசாவைச் சேர்ந்த ஞான ரஞ்சன் சாகு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, செப்டம்பர் 12: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகர பேருந்தை இளைஞர் ஒருவர் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்தப் பேருந்தை ஆந்திர பிரதேசம் மாநிலம் நெல்லூர் அருகே காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சென்னையை பொறுத்தவரை தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக திகழ்கிறது. இதனை தவிர்த்து முன்பாக செயல்பட்டு வந்த கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து குறிப்பிட்ட சில இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மாநகர பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் சென்னை மாநகரை பொறுத்தவரை 32 பணிமனைகள் செயல்பாட்டில் உள்ள நிலையில் சுமார் 3,376 பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இதனைத் தவிர பல்வேறு மாவட்டங்களுக்கும் சுமார் 20,000 மேற்பட்ட பேருந்துகள் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பணிமனையில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் பார்க்கிங் செய்யப்படுவதற்கு இடம் அமைக்கப்பட்டுள்ளது இங்கு நேற்றிரவு பேருந்து ஒன்றை இயக்குவதற்காக அதன் ஓட்டுனர் வந்துள்ளார்.
Also Read: அதிகாலையில் வந்த 3 நபர்கள்.. வீட்டில் இருந்த 40 சவரன் நகை கொள்ளை!
அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை காணாமல் அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இந்த சம்பவம் குறித்து கிளை மேலாளர் ராம் சிங்கிடம் தெரிவித்துள்ளார். அவர் சற்றும் தாமதிக்காமல் கோயம்பேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேலாளர் ராம் சிங்கிடம் எழுத்துப்பூர்வமாக புகாரைப் பெற்று வழக்குப்பதிவு செய்தனர்.
சிசிடிவி காட்சியால் சிக்கிய பேருந்து
உடனடியாக கோயம்பேடு பணிமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேருந்து எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அனைத்து மாவட்ட காவல் நிலையத்திற்கும் பேருந்து பதிவு எண் மற்றும் புகைப்படத்தை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணை, பேருந்தில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் டிராக்கர் மற்றும் சிசிடிவி காட்சிகளின் ஆய்வில் அந்த பேருந்து ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருப்பது கண்டறியப்பட்டது.
Also Read: பயணிகளே அலர்ட்.. மெட்ரோ ரயிலில் இதை செய்தால் அபராதம்.. கடும் எச்சரிக்கை!
உடனடியாக விரைந்து சென்ற எல்லை மாவட்ட காவல்துறையினர் தமிழக அரசு பேருந்தை மீட்டனர். மேலும் பேருந்தைச் ஓட்டிச் சென்ற நபரையும் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஞான ரஞ்சன் சாகு என்பது தெரியவந்தது. 24 வயதான அவர் கூலி வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த நபருக்கு காது மற்றும் வாய் தொடர்பான குறைபாடுகள் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.