இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
ஜூலை 1, 2026 இன்றும், ஜூலை 2, 2026 நாளையும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, ஜூலை 1 : சென்னை வானிலை ஆய்வு மையம் மழை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, கடல் மட்டத்தில் மகாராஷ்டிராவிலிருந்து வடக்கு கேரளம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ உயரத்திலிருந்து 5.8 கிமீ உயரம் வரை வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் ஜூலை 3, 2026 அன்று வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவித்துள்ளது.
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக ஜூலை 1, 2026 இன்றும், ஜூலை 2, 2026 நாளையும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அதிகாரிகள் விதிகளுக்கு உள்பட்டு சுதந்திரமாக செயல்படலாம்… முதல்வர் ஜோசப் விஜய்!




கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 4, 2026 அன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஜூலை 5, 2026 அன்று மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின பிற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 6, 2026 அன்று மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தமிழகத்தில் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஜூலை 1, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக வெங்கடராமன் ஐபிஎஸ் நியமனம்!
வெப்ப நிலையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் ஜூலை 2, 2026 அன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணித்துள்ளது.