AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“இனி 100 அல்ல.. 125 நாட்கள் வேலை!”.. தமிழகத்தில் ‘விபி-ஜி ராம் ஜி திட்டம்’ இன்று முதல் அமல்.. முழு விவரம் உள்ளே!!

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்குத் தனித்துவமான எண்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை வழங்கப்படும். முடிந்தவரை தொழிலாளர்கள் வசிக்கும் கிராமத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் வேலை வழங்கப்படும். ஒருவேளை 5 கிலோமீட்டருக்கு வெளியே வேலை வழங்கப்பட்டால், அதற்காக கூடுதலாக 10 சதவீத கூலி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இனி 100 அல்ல.. 125 நாட்கள் வேலை!”.. தமிழகத்தில் ‘விபி-ஜி ராம் ஜி திட்டம்’ இன்று முதல் அமல்.. முழு விவரம் உள்ளே!!
விபி-ஜி ராம் ஜி திட்டம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 01 Jul 2026 07:35 AM IST

சென்னை, ஜூலை 01: கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்கும் நோக்கில் கடந்த 2005-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் நாடு முழுவதும் பரவலாகச் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த திட்டத்தில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களைச் செய்து, அதற்குப் பதிலாக “வளர்ச்சியடைந்த இந்தியா- வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம்” (VB-G RAM G – விபி-ஜி ராம் ஜி) என்ற புதிய திட்டத்தை இன்று (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.

தமிழகத்திலும் இத்திட்டத்தை “வளர்ச்சி அடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்” என்ற பெயரில் செயல்படுத்துவதற்கான விதிகள் உருவாக்கப்பட்டு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க: இளைஞர்- இளம் பெண் தூக்கில் சடலமாக மீட்பு.. தற்கொலையா? ஆணவ படுகொலையா? பரபரப்பில் மயிலாடுதுறை!

125 நாட்களாக அதிகரிப்பு:

இந்த புதிய திட்டத்தின்படி, கிராமப்புற மக்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கான நிதிச்சுமையை மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் ஏற்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிற்கு இத்திட்டத்திற்காக மத்திய அரசு 7,585 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள நிலையில், மாநில அரசு தனது பங்காக 5,057 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

60 நாட்கள் விடுப்பு:

இத்திட்டத்தின் மிக முக்கிய அம்சமாக, விதைப்பு மற்றும் அறுவடை போன்ற உச்சகட்ட விவசாயக் காலங்களில் கிராமப்புறங்களில் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், ஆண்டுக்கு மொத்தம் 60 நாட்கள் வரை இந்த திட்டப்பணிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கான பணியாளர்களைத் தேர்வு செய்து, அதனைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் முழுப் பணிகளையும் அந்தந்த கிராம பஞ்சாயத்துகளே மேற்கொள்ளும். வேலைவாய்ப்பு வழங்குவதில் பெண்களுக்கு, குறிப்பாக ஆதரவற்றுத் தனியாக வாழும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இருப்பிட சுற்றளவு மற்றும் கூடுதல் கூலி:

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்குத் தனித்துவமான எண்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை வழங்கப்படும். முடிந்தவரை தொழிலாளர்கள் வசிக்கும் கிராமத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் வேலை வழங்கப்படும். ஒருவேளை 5 கிலோமீட்டருக்கு வெளியே வேலை வழங்கப்பட்டால், அதற்காக கூடுதலாக 10 சதவீத கூலி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயோமெட்ரிக் வருகை:

வேலைக்கு வருபவர்களின் வருகை தினசரி ‘பயோமெட்ரிக்’ முறையில் பதிவு செய்யப்படும். திட்டப்பணிகள் அனைத்தும் ‘ஜியோ-டேக்கிங்’ மற்றும் ‘ஜி.பி.எஸ்.’ தொழில்நுட்பத்தின் மூலம் நேரடியாகக் கண்காணிக்கப்படும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் திட்டமிடல், கண்காணிப்பு, தணிக்கை மற்றும் முறைகேடு தடுப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும்.

குழந்தை பராமரிப்பு வசதிகள்:

வேலை நடைபெறும் இடங்களில் குடிநீர், ஓய்வெடுக்க நிழல் வசதி மற்றும் முதலுதவி பெட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளுடன் பெண்கள் வேலைக்கு வரும்போது, அங்கு 5 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களைக் கவனிப்பதற்காகவே ஒரு பெண் தொழிலாளி நியமிக்கப்படுவார்; அவருக்கும் தனியாகக் கூலி வழங்கப்படும்.

வேலை செய்யும் போது காயம் ஏற்பட்டால் இலவச மருத்துவ சிகிச்சையும், மருத்துவமனையில் அனுமதிக்க நேர்ந்தால் சிகிச்சை, மருந்து, தங்குமிடம் மற்றும் தினசரி உதவித்தொகையும் வழங்கப்படும். உயிரிழப்பு அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால், அரசு அறிவிக்கும் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் உரிய இழப்பீடு வழங்கப்படும்.

மேலும் படிக்க: நெல்லை 3 சிறுமிகள் வன்கொடுமை வழக்கு.. காமுகனின் தூக்கு தண்டனையை உறுதி செய்த மதுரை உயர்நீதிமன்றம்!

திட்டத்தில் வெளிப்படைத்தன்மை:

இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் அனைத்துப் பணிகளும் 6 மாதங்களுக்கு ஒருமுறை சமூகத் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். வருகைப் பதிவேடு, செலவுக் கணக்குகள், புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். மேலும், வேலை இழப்பு உதவித்தொகை மற்றும் கூலி தாமத இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசே வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us