கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டு கொன்ற சம்பவம்.. குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம்.. வனத்துறை அமைச்சர்!
Minister Ranjith Kumar announced Rs 30 lakh : கர்நாடகாவில் வனத்துறை அதிகாரிகளால் சுட்டு கொலை செய்யப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் முதல்வருடன் ஆலோசித்து வழங்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில், கர்நாடகா மாநிலத்தில் வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டவர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது, கர்நாடகாவில் சுட்டு கொலை செய்யப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்படுமா என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி கவனம் ஈர்ப்பு தீர்மானத்தின் மீது கேள்வி எழுப்பினார். அப்போது, அவர் பேசுகையில், நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றால், இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
கர்நாடக அரசு அறிவித்த நிதி குறைவு
கர்நாடகா அரசு அறிவித்துள்ள நிதி மிக மிக குறைவாகும். எனவே, தமிழக அரசு பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்தார். இதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன் பேசுகையில், கர்நாடக மாநில வனத்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சிபிஐ விசாரணைக்கு கர்நாடக மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் படிக்க: தவெக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்கு.. ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பு.. என்ன காரணம்!
3 தமிழர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி
இதற்கு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் எழுந்து, இதற்கு பதில் அளித்தார். இதில், முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் ஆணைக்கு இணங்க சுட்டு கொலை செய்யப்பட்ட 3 தமிழர்களுக்கும் தலா ரூ. 10 லட்சம் வழங்க வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு விரைவில் வழங்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் வனப் பகுதியில் மான் வேட்டையாடுவதற்காக 4 தமிழர்கள் நாட்டு துப்பாக்கிகளுடன் வேட்டையாட சென்றதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் நிகழ்ந்த என்கவுண்டர் சம்பவம்
இது குறித்து தகவல் அறிந்த கர்நாடக மாநில வனத்துறை சம்பவ இடத்துக்கு சென்றது. அங்கு, வனத்துறை அதிகாரிகளுக்கும், தமிழர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் 3 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் குண்டு காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
முதல்வருடன் ஆலோசித்து நிதியுதவி
இந்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு, தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். தற்போது, தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,3 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்? வெளியான பரபரப்பு தகவல்