பெண்களுக்கு தனி நல வாரியம்… தங்கம் தென்னரசு கொடுத்த சூப்பர் அறிவிப்பு!
Separate Welfare Board For Destitute Women: தமிழகத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தனி நல வாரியம் செயல்படுத்தப்பட்டு வருவதாக இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

ஆதரவற்ற பெண்களுக்கு தனி நல வாரியம்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. இந்த கூட்டத் தொடரின் முதல் கட்டமாக தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் தங்கம் தென்னரசு அறிவித்து உரையாற்றினார். இதில், பெண்களுக்கான பல்வேறு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து அறிவித்திருந்தார். அதில், மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பேருந்து பயணத்திட்டம், முதியோர்களுக்கான உதவித் தொகை உயர்வு உள்ளிட்டவற்றை குறிப்பிட்டிருந்தார்.
கைம்பெண்கள் நலவாரியம் தொடக்கம்
மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவிற்கு முன்னோடி திட்டமாக திகழ்கிறது. மகாகவி பாரதியின் பெருங்கனவை நிறைவேற்றும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. மொத்தத்தில் மகளிர் வளர்ச்சி திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. கிராமப்புற பகுதிகளில் கல்வி பயின்று நகரப் பகுதிகளுக்கு வேலை வாய்ப்புக்காக வரும் இளம் பெண்கள் பாதுகாப்பான முறையில் பங்கு பணி புரிவதற்கு 19 தோழி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. கைம்பெண்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Tamil Nadu Interim Budget Analysis 2026-27: தமிழக அரசின் கடன் சுமை ரூ.10.61 லட்சம் கோடியாக உயர்வு.. முழு நிதிநிலை விவரம்!!
130 அவசர கால மகப்பேறு, குழந்தைகள் பராமரிப்பு மையங்கள்
இது போன்ற பல்வேறு திட்டங்கள் நாடு முழுவதும் பல்வேறு பாராட்டுகளை பெற்றதுடன், பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பை குறைக்கும் நோக்கத்தோடு 130 அவசரகால மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான முறையில் பிரசவம் நடைபெறுவதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 6 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை களைவதற்கு ஊட்டச்சத்தை முன்னெடுக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் பாதுகாப்பு திட்டம்
மேலும், அவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்வதற்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு அரசு சார்பில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு உரிய அதிகாரம் அளித்திடவும் தமிழ்நாடு பெண்கள் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் மீது பதிவு செய்யப்படும் அசையா சொத்துகளுக்கு ஒரு சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.