108 ஆம்புலன்ஸ் சேவையில் அதிரடி மாற்றம்.. அவசர கால உதவிக்கான ‘ரெஸ்பான்ஸ் டைம்’ பெருமளவு குறைப்பு!
108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த சேவையின் மூலம் பயனடைந்துள்ளனர். பிரசவம் மற்றும் அவசர மகப்பேறு சிகிச்சைக்காக 47.73 லட்சம் பேரும், இதர அவசர மருத்துவ உதவிகளுக்காக 1.18 கோடி பேர்.
சென்னை, ஜுன் 07: தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், அவசர காலங்களில் நோயாளிகளைச் சென்றடைவதற்கான நேரம் மற்றும் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நேரம் வெகுவாகக் குறைந்துள்ளதாக 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு புதிய மற்றும் அறிவியல் பூர்வமான முயற்சிகளால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க: “தவெக-வுக்கு கொள்கை, கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும் கிடையாது!”.. சரமாரியாக விளாசிய முத்தரசன்!
ஆம்புலன்ஸ்கள் சென்றடையும் நேரம்:
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், ஆம்புலன்ஸ்கள் அழைப்பு வந்த இடத்திற்குச் சென்றடையும் நேரம் மண்டல வாரியாகப் பின்வருமாறு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநகர பகுதிகளில் முன்பு 7.45 நிமிடங்களாக இருந்த அணுகும் காலம், தற்போது 6.14 நிமிடங்களாகக் குறைந்துள்ளது. நகரப் பகுதிகளில் முன்பு 11.47 நிமிடங்களாக இருந்தது, தற்போது 10.07 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் முன்பு 14.15 நிமிடங்களாக இருந்த நேரம், தற்போது 12.18 நிமிடங்களாகக் குறைந்துள்ளது. மலைக்கிராமங்களில் மலைப்பாங்கான பகுதிகளில் 15.41 நிமிடங்களாக இருந்த நேரம், தற்போது 14.23 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, விபத்து மற்றும் அவசர காலங்களில் உதவி கோரி தொடர்பு கொள்ளும்போது, தமிழக அளவில் சராசரி அணுகும் நேரம் 11.42 நிமிடங்களில் இருந்து 9.48 நிமிடங்களாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வேகம் எப்படிச் சாத்தியமானது?
ஆம்புலன்ஸ் சேவை இவ்வளவு விரைவாக மக்களைச் சென்றடைவதற்கு 108 நிர்வாகம் மேற்கொண்டுள்ள முக்கிய தொழில்நுட்ப மாற்றங்கள் வருமாறு, அனைத்து ஆம்புலன்ஸ்களிலும் நவீன ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு, அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விபத்துகள் அதிகம் நடக்கக்கூடிய பகுதிகளாகக் கண்டறியப்பட்ட இடங்களில், சுழற்சி அடிப்படையில் ஊழியர்களுடன் ஆம்புலன்ஸ்கள் எப்போதும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. பாதிப்புகள் அதிகமாக உள்ள இடங்கள் மற்றும் பெரிய மருத்துவமனைகள் உள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து கிளஸ்டர் அடிப்படையில் ஆம்புலன்ஸ் பயன்பாடு தொடர்ச்சியாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை பயனடைந்தவர்கள் எண்ணிக்கை:
108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த சேவையின் மூலம் பயனடைந்துள்ளனர். பிரசவம் மற்றும் அவசர மகப்பேறு சிகிச்சைக்காக 47.73 லட்சம் பேரும், இதர அவசர மருத்துவ உதவிகளுக்காக 1.18 கோடி பேர்.
இதையும் படிக்க: “டாஸ்மாக் தனியார்மயம் ஆக்கப்படுகிறதா?”.. என்ன சொல்கிறார் அமைச்சர் விக்னேஷ்?
அடுத்தகட்ட திட்டம்:
சென்னை போன்ற பெருநகரங்களில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல்களுக்கு இடையேயும், ஆம்புலன்ஸ் சேவையை மேலும் தாமதமின்றி விரைவுபடுத்துவதற்காகப் பல்வேறு அறிவியல் ரீதியான தொழில்நுட்ப முறைகளைக் கையாள 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.