கொளத்தூரில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.. உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு!
M. K. Stalin Challenging Victory Of V. S. Babu : கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி. எஸ். பாபு வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடுத்துள்ளார். முழு விவரத்தை பார்க்கலாம்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரான வி. எஸ். பாபு வெற்றி பெற்றார். இதில், ஏற்பட்ட தோல்வியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மு. க. ஸ்டாலின் வழக்கு தொடுத்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன. ஏனென்றால், முன்னாள் முதல்வரின் சொந்த தொகுதி என்பதாலும், திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளரும், தவெகவின் வேட்பாளருமான வி. எஸ். பாபு போட்டியிட்டதே காரணமாகும்.
வி.எஸ்.பாபு எம்எல்ஏ வெற்றியை எதிர்த்து வழக்கு
இதில், மு. க. ஸ்டாலின் சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்றும், மீண்டும் சோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதில், நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், கொளத்தூர் தொகுதியில் 14 வாக்கு சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் கடந்த ஜூலை 29- ஆம் தேதி மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில், சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான சமீரன் முன்னிலையில் சுமார் 3 நாட்கள் ஆய்வுப் பணிகள் நடைபெற்றது.
மேலும் படிக்க: “பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுகிறது!”.. பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!




கொளத்தூர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு
இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி. எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு. க. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி. எஸ். பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தின் அனுமதி கோரப்பட்டிருந்தது. அனுமதி பெற்றதை தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் இளங்கோ தலைமையிலான வழக்கறிஞர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தனர்.
மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்
அதில், வாக்குப்பதிவு மையங்களான 1, 17, 28, 32, 75, 78, 79, 84, 87, 112,122,157,170 உள்ளிட்ட மையங்களில் வைக்கப்பட்டிருந்த விவி பேட், வாக்குப்பதிவு இயந்திரம், கண்ட்ரோல் யூனிட் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. இதில், 6 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், விவி பேடுகளை ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, தேர்தல் இயந்திரம் தொடர்பாக புகார் செய்வது தொடர்பான வெளிப்படையான ஒரு நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.வி.எஸ்.பாபு வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும். நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “மாற்றம் என்பது ஏமாற்றமாகிவிட்டது!”.. தவெக அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!!