“மாற்றம் என்பது ஏமாற்றமாகிவிட்டது!”.. தவெக அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!!
MK Stalin Speech: திமுக குடும்பத் திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், திராவிட இயக்கமே தமிழகத்தில் ஊருக்கு ஊர் பட்டதாரிகள் உருவாகக் காரணம் எனப் பெருமிதம் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தற்போது மக்களுக்குப் பெரும் ஏமாற்றமாகவே முடிந்துள்ளதாகவும், கோடிக்கணக்கான மக்கள் துன்பப்பட்டு வருவதாகவும் தவெக அரசை விமர்சித்தார்.
சென்னை, ஆகஸ்ட் 24: திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமது குடும்பத்தின் முக்கியப் பொறுப்பாளர்களாக விளங்கிய முரசொளி மாறன், முரசொளி செல்வம் மற்றும் அமுதன் ஆகியோரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, திராவிட இயக்கத்தின் பங்களிப்புகள் குறித்தும் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் சுவாரசியமான கருத்துகளை வெளியிட்டுள்ளார். திமுக குடும்பத்தைச் சேர்ந்த அமுதனின் பேத்தியான மருத்துவர் இலக்கியா மற்றும் மருத்துவர் வினோத் ஆகியோரின் திருமண விழாவில் கலந்துகொண்டு தலைமையேற்று உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தமது சிறுவயது நினைவுகளையும் தங்களை நேர்வழியில் வளர்த்தெடுத்த பெரியவர்களின் அர்ப்பணிப்பையும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
இதையும் படிக்க: ‘வெற்றி பயணம்’.. மாவட்டங்களுக்கு இடையே மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!!
நினைவுகளைப் பகிர்ந்த ஸ்டாலின்:
தமது உரையில் சிறுவயது நினைவுகளைப் பற்றி மேலும் பகிர்ந்துகொண்ட அவர், கலைஞர் கருணாநிதி அரசியலிலும் இயக்கப் பணிகளிலும் தீவிரமாகப் பணியாற்றி வந்த காலத்தில், தங்களுடைய சிறுபிராயத்து வளர்ப்பு மற்றும் வழிகாட்டலின் பெரும் பொறுப்பை முரசொளி மாறன், முரசொளி செல்வம் மற்றும் அமுதன் ஆகிய மூன்று மூத்தவர்களுமே ஏற்றுக்கொண்டனர் என்று குறிப்பிட்டார். “நாங்கள் என்ன படிக்க வேண்டும், எந்தப் பள்ளிக்கு அல்லது கல்லூரிக்குச் செல்ல வேண்டும், எந்தத் துறையைத் தேர்வு செய்து தொழிலில் ஈடுபட வேண்டும் என்றெல்லாம் எங்களுக்கு நேரில் இருந்து அன்போடு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கியவர்கள் இவர்களே” என்று மு.க.ஸ்டாலின் உருக்கமாகக் கூறினார்.
மாற்றத்திற்கு திமுகவே முதன்மை காரணம்:
திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய மு.க.ஸ்டாலின், ஒரு காலத்தில் ஒரு குடும்பத்தில் அத்திபூத்தால் போல் யாராவது ஒருவர் மட்டுமே பட்டதாரியாகவோ அல்லது மருத்துவராகவோ உருவாகும் நிலை இருந்ததைச் சுட்டிக்காட்டினார். ஆனால், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட திராவிட இயக்கத்தின் தொடர் போராட்டங்களாலும் ஆட்சி அதிகாரத்தில் கொண்டுவரப்பட்ட கல்வித் திட்டங்களாலும் தான், இன்றைக்கு ஊருக்கு ஊர், கிராமத்திற்கு கிராமம், ஏன் ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரிகளும் மருத்துவர்களும் உருவாகும் சூழல் நிலைநாட்டப்பட்டுள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்திற்கு திராவிட இயக்கமே முதன்மைக் காரணம் என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிக்க: ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர்.. முதல்வர் விஜய் அறிவிப்பு
ஏமாற்றமாக முடிந்த மாற்றம்:
தொடர்ந்து தற்போதைய அரசியல் நிலைமை குறித்துப் பேசிய அவர், இது ஒரு குடும்ப விழா என்பதால் அதிகமாக அரசியல் பேச விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட போதிலும், தற்போதைய ஆட்சி மாற்றத்தைக் மறைமுகமாகச் சாடினார். “தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றம் என்பது தற்போது மக்களுக்குப் பெரும் ஏமாற்றமாகவே முடிந்துள்ளது; இதனால் கோடிக்கணக்கான பொதுமக்கள் அன்றாடம் பல்வேறு துன்பங்களைச் சந்தித்து வருகின்றனர்” என்று குற்றம்சாட்டினார். மக்கள் இந்த நிலையை உணர்ந்து, வரவிருக்கும் காலங்களில் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், கலைஞர் கருணாநிதி வழியில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தூய தமிழ் பெயர்களைச் சூட்ட வேண்டும் என மணமக்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துத்தார்.