“ஆக்ரா ரயில் முதல் கூடுவாஞ்சேரி பிரியாணி அண்டா வரை!”.. கொடூர கொலையும், கண்டெடுக்கப்பட்ட பெண் உடலும்!..
Guduvanchery Woman Murder Case: சென்னை கூடுவாஞ்சேரியில் பெண் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சமையலறை பிரியாணி அண்டாவிலிருந்து உடல் பாகங்கள் மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைபேசி சிக்னல் மூலம் குற்றவாளிகளைக் கண்டறிந்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள அசாம் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த இருவரைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
ஆக்ரா ரயில் நிலையத்தில் ஆகஸ்ட் 5 அன்று தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த சிவப்பு நிற டிராலி பை ஒன்றில் தலை இல்லாத நிலையில், மிகவும் அழுகிய பெண் உடலின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஆக்ரா ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கொடூரமான முறையில் கொல்லப்பட்ட அந்தப் பெண் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்பதும், அவர் சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் தங்கிப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையும் படிக்க: திருவள்ளூரில் பரபரப்பு.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. பாய்ந்தது போக்சோ சட்டம்!
தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார்:
இதனையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை தீவிர விசாரணையில் இறங்கின. ஆகஸ்ட் 3-ஆம் தேதி இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு ஆணும் பெண்ணும் சந்தேகத்திற்கிடமான டிராலி பையை எடுத்துச் செல்லும் காட்சிகள் உறுதியாயின. இத்தடயங்களின் அடிப்படையில் களத்தில் இறங்கிய தனிப்படை போலீசார், சந்தேகத்திற்குரிய நபர்களின் கைபேசி சிக்னலை வைத்து அவர்களின் இருப்பிடத்தை செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள வாடகை வீடு என அடையாளம் கண்டனர்.
பிரியாணி டபராவுக்குள் உடல் பாகங்கள்:
காவல்துறையினர் அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது, அங்கு காணப்பட்ட காட்சிகள் அதிகாரிகளையே உரைய வைத்தன. வீட்டின் சமையலறையில் இருந்த ஒரு பெரிய பிரியாணி டபராவுக்குள் கொடூரமாகத் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையிலிருந்த பெண்ணின் கூடுதல் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. விசாரணையில், அதே வீட்டைச் சேர்ந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மணிக் உதின் லஸ்கர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த பகவதி மாஜி ஆகிய இருவருடன் ஹயாதுன் நிஷா தங்கியிருந்ததும், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே இக்கொலைக்குக் காரணம் என்பதும் தெரியவந்தது. கொலையாளிகள் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, ஒரு பகுதியைத் டிராலி பையில் அடைத்து ரயிலில் அனுப்பிவிட்டு, மீதிப் பகுதியை வீட்டில் விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
துர்நாற்றம் வராமல் இருக்க சமையல் பாத்திரம்:
இக்கொடூர வழக்கு குறித்துத் தகவலறிந்ததும் செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயராதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தடைய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, வீட்டில் இருந்த இரத்தக் கரைகள் மற்றும் கைரேகைப் பதிவுகள் சேகரிக்கப்பட்டன. கொலையாளிகள் கொலையைச் செய்த பிறகு ஆதாரங்களை மறைக்கவும் உடலைத் துர்நாற்றம் வீசாமல் அழிக்கவும் சமையலறைப் பாத்திரங்களைப் பயன்படுத்தியிருப்பது காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையும் படிக்க: சதுரங்க வேட்டை பட பாணியில் நில மோசடி.. போலி ஆவணத்தால் ரூ.4 கோடிக்கு விற்பனை.. கம்பி எண்ணும் மூவர்!
தலைமறைவான இருவரை பிடிக்க தனிப்படை:
தற்போது இச்சம்பவம் தொடர்பாகக் கூடுவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மணிக் உதின் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி ஆகிய இருவரையும் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்கள் அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். கைபேசி எண்கள் மற்றும் ரயில் நிலையச் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இக்கொலையின் பின்னணியில் கள்ளக்காதல் விவகாரமா அல்லது பணப் பரிமாற்றத் தகராறா என்ற கோணத்திலும், இதில் வேறு நபர்களுக்குத் தொடர்புள்ளதா என்றும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.