“அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் தவெகவில் இணைய தயார்!”.. பரபரப்பை கிளப்பிய அமைச்சர் செங்கோட்டையன்!!
KA Sengottaiyan Slams DMK and ADMK: தவெக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது செல்வாக்கை இழந்து தடுமாறி வருவதாகச் சாடினார். மக்கள் விரும்பிய அரசியல் மாற்றமாகத் தவெக உருவெடுத்துள்ளதாகவும், வரும் காலத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராவார் என்றும் அவர் முழங்கினார்.
ஈரோடு, ஆகஸ்ட் 24: தமிழ்நாடு அரசியலில் நாளுக்கு நாள் களம் சூடுபிடித்து வரும் சூழலில், எதிர்க்கட்சியான அதிமுகவிற்குப் பேரதிர்ச்சி அளிக்கும் வகையிலான பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணையத் தயாராக இருப்பதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளார். தமிழக அரசியலில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் தற்போது தங்களது செல்வாக்கை இழந்து தடுமாறி வருவதாகவும் சாடினார்.
இதையும் படிக்க : காங்கிரஸ் இல்லையெனில் தவெக கதை முடிந்திருக்கும்.. மாணிக்கம் தாகூர் ஆவேசம்!
10 அதிமுக எம்எல்ஏக்கள் தயார்:
கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய செங்கோட்டையன், அதிமுகவின் தற்போதைய பலவீனமான நிலையைச் சுட்டிக்காட்டி மிகக் காரசாரமாகப் பேசினார். ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களின் விலகலால் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 47 ஆகக் குறைந்துபோயுள்ளது என்றார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியாமல் இன்னும் 10 எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணையத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டார்.
மொத்தமாக 25 எம்.எல்.ஏ.க்கள் தயார்:
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவல் குறித்து மேலும் விளக்கிய அவர், “அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து வெளியேறக் காத்திருக்கிறார்கள். படிவம் கைக்கு வந்ததும் அந்த 10 பேரும் முறைப்படி விலகித் தவெகவில் இணைந்து விடுவார்கள். அதுமட்டுமின்றி, மொத்தமாக 25 எம்.எல்.ஏ.க்கள் ஒரே நேரத்தில் தவெகவுக்கு வரத் தயாராகிவிட்டனர். இவை அனைத்தும் நடக்கும் போதுதான் அதிமுக தலைமைக்கு நிலைமையின் தீவிரம் புரியவரும்” என்று எச்சரிக்கை தொனியில் பேசினார்.
நிலைகுலைந்த அதிமுக, திமுக:
தமிழக அரசியலில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் தற்போது தங்களது செல்வாக்கை இழந்து தடுமாறி வருவதாகவும், வடதுருவமும் தென்துருவமும் போல செயல்பட்ட இரு கட்சிகளும் இன்று கூட்டணி வைக்கலாமா என்ற யோசனைக்கு வரும் அளவுக்குப் பலவீனமடைந்துள்ளன என்றும், இது தொண்டர்களுக்குச் செய்யப்படும் துரோகம் என்றும் சாடினார்.
இதையும் படிக்க : சட்டப்பேரவையை சண்டை களமாக மாற்ற முயற்சி.. எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு!
தலைவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள்:
திமுக மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர்கள் கற்பனை உலகத்தில் மிதந்து கொண்டிருப்பதாகக் சாடிய அவர், எதிர்காலத்தில் சில கட்சிகளில் வெறும் தலைவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள் தவிர தொண்டர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று விமர்சித்தார். தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்ட நிலையில், வரும் காலத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக அரியணையில் தொடர்வார் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார்.