தவெகவில் இணையும் நடிகர் தேவன் – கேரள மாநில தலைவராகிறார்? – பரபரப்பு தகவல்
Devan Joins TVK : பாட்ஷா, ஷாஜகான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் தேவன் சமீபத்தில் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தவெகவில் இணையும் அவர், விஜய் முன்னிலையில் கேரளத்தில் தவெக கட்சியின் தலைவராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
தமிழில் பாட்ஷா, ஷாஜகான், சிட்டிசன், பேரழகன், சிவகாசி, விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தேவன். கேரளத்தை சேர்ந்த இவர் மலையாளத்தில் ஏகப்பட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய இவர் தவெகவில் இணையவுள்ளதாகவும், தவெகவின் கேரள தலைவராக செயல்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் தேவன் பாஜகவிலிருந்து விலகுவதாக மிகவும் எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்டார். பொது மேடை ஒன்றில் பேசும்போது, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பாஜகவிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். அவர் விலகியதைத் தொடர்ந்து, அவர் எந்தக் கட்சியில் இணைவார் என்பது குறித்த பல யூகங்கள் எழுந்தன. இப்போது, அந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாஜகவிலிருந்து விலகிய அவர், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : சட்டப்பேரவையை சண்டை களமாக மாற்ற முயற்சி.. எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு!




தவெகவில் இணைவது தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் நடவடிக்கைகளும் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கட்சியில் இணைவதற்கு முன்னதாக, அவர் விஜய்யை நேரில் சந்திப்பார். அதன் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
தவெகவைப் பொறுத்தவரை, தமிழகத்தைத் தாண்டி மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் தங்கள் கட்சியை விரிவுபடுத்தத் திட்டமிட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், கேரளாவில் கட்சியின் முகமாக நடிகர் தேவன் போன்ற ஒருவர் இருப்பது மிகவும் சாதகமான அம்சமாக அக்கட்சியினர் கருதுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நடிகர் தேவனுக்கு தவெகவின் மாநிலத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த தேவன், அப்பதவியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக கடந்த ஆகஸ்ட் 16, 2026 அன்று அறிவித்தார். ஆலப்புழாவில் உள்ள கனிச்சுகுளங்கரா தேவி கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார். பாஜகவின் மூத்த தலைவர்கள் அவரைத் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுமாறு வலியுறுத்தியும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, தேவன் தனது ராஜினாமா கடிதத்தை அதிகாரப்பூர்வமாக பாஜகவிடம் சமர்ப்பித்தார்.
இதையும் படிக்க : திருவள்ளூரில் பரபரப்பு.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. பாய்ந்தது போக்சோ சட்டம்!
நடிகர் தேவன் பல ஆண்டுகளாகப் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் கடந்த 2004 ஆம் ஆண்டில் நவ கேரளா மக்கள் கட்சி என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்தக் கட்சி 2021 ஆம் ஆண்டில் பாஜகவுடன் இணைக்கப்பட்டது. இதனையடுத்து கேரளத்திலும் தவெகவை பலப்படுத்த அக்கட்சியின் திட்டமிட்டு வருகின்றனர். தமிழகத்தை போல கேரளத்திலும் அக்கட்சியினர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் தேர்தலில் நின்றால் தவெக குறிப்பிட்ட வெற்றிகளை பெறும் என்பது அவர்களது எண்ணமாக இருக்கிறது.