தமிழகத்தின் (பொ) ஆளுநராக பதவியேற்றார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்… யார் இவர்… முழு விவரம்!
Rajendra Vishwanath Arlekar: தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கேரள மாநிலத்தின் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். யார் இந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். இவர் பின்னணி மற்றும் கடந்து வந்த பாதை குறித்து இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக கவர்னராக இருந்து வந்த ஆர். என். ரவி மேற்குவங்க மாநிலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர், நேற்று புதன்கிழமை ( மார்ச் 11) போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று வியாழக்கிழமை ( மார்ச் 12 ) ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றார். அவருக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக தமிழக ஆளுநர் பதவி வகித்து வந்த ஆர். என். ரவிக்கும், திமுக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள பொறுப்பு ஆளுநர் யார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் யார் இவர்
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவி ஏற்றுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கோவா மாநிலம், பனாஜியில் விஸ்வநாத் அர்லேகர்- திலோத்தம்மா தம்பதிக்கு 1954- ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி மகனாக பிறந்தார். வணிகவியல் பட்டப்பட்டிப்பு படித்துள்ள இவர், சிறுவயதில் இருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்தார். இதனிடையே, இந்தியாவின் நெருக்கடி நிலை காலத்தில் தனது தந்தையுடன் சிறை சென்றார். பின்னர், கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2007- ஆம் ஆண்டு வரை கோவாவில் எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழகம் ஒரு குடும்பத்தின் ஏடிஎம்மாக மாறிவிட்டது – திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு




கோவா மாநில பாஜக தலைவர்
இதேபோல கடந்த 2003 முதல் 2007- ஆம் ஆண்டு வரை கோவா மாநில பாஜக தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். 2012 முதல் 2017 வரை கோவா சட்டப்பேரவையின் தலைவராகவும் இருந்துள்ளார். அப்போது, இந்தியாவில் காகிதம் இல்லா முறையே பின்பற்றிய முதல் சட்டப்பேரவையாக கோவாவை மாற்றி காண்பித்தார். இந்த தொலை நோக்கு பார்வை தேசிய அளவில் பாராட்டை பெற்றது. முன்னதாக கோவா வனம், சுற்று சூழல், பஞ்சாயத்து துறை அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளனர். இதை தொடர்ந்து, கடந்த 2021- ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹிமாச்சல பிரதேசத்தின் 21- ஆவது கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம் செய்யப்பட்டார்.
கவர்னரின் குடும்ப பின்னணி
கடந்த 2023- ஆம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்து வந்த ராஜேந்திர விஸ்வநாத் அதே ஆண்டில் பீகாரின் 30- ஆவது கவர்னராக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர், கடந்த 2025- ஆம் ஆண்டு கேரளாவின் 23- ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். தற்போது, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவி ஏற்றுள்ளார். இவருக்கு அனகா அர்லேகர் என்ற மனைவியும், அதிதி குழுக்கர்னி என்ற மகளும், அமோக் அர்லேகர் என்ற மகனும் உள்ளனர்.
மேலும் படிக்க: திருச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரூ.5,650 கோடி திட்டங்கள் என்னென்ன!