கள்ளக்குறிச்சிஎம்எல்ஏ மீதான புகார்: சாட்சியாக மாறும் நீதிபதி – வெளியான தகவல்
Kallakurichi MLA Case : கள்ளக்குறிச்சி குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில், நீதிபதி முன்னிலையில் ஆட்சியரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 183-இன் கீழ், பாதிக்கப்பட்டவர் நீதித்துறை நடுவர் முன் நேரடியாக வாக்குமூலம் அளிக்கலாம். காவல்துறையிடம் அளிக்கப்படும் வாக்குமூலத்தைவிட, நீதிபதி முன் பதிவு செய்யப்படும்.
சென்னை, நவம்பர் 26 : கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு அநாகரிகமாக குறுஞ்செய்திகள் அனுப்பித் தொல்லை கொடுத்ததாக, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் (Arul Vignesh) மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் நீதிபதி முன் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். கள்ளக்குறிச்சி குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில், நீதிபதி முன்னிலையில் ஆட்சியரின் வாக்குமூலம் சுமார் 2 மணி 15 நிமிடங்கள் பதிவு செய்யப்பட்டது.
சாட்சியாக மாறும் நீதிபதி
முன்பு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 164 என அறியப்பட்ட, தற்போதைய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 183-இன் கீழ், பாதிக்கப்பட்டவர் நீதித்துறை நடுவர் முன் நேரடியாக வாக்குமூலம் அளிக்கலாம். காவல்துறையிடம் அளிக்கப்படும் வாக்குமூலத்தைவிட, நீதிபதி முன் பதிவு செய்யப்படும் இந்த வாக்குமூலம் வழக்கில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. விசாரணையின்போது சாட்சியத்தை உறுதிப்படுத்தவோ, முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டவோ நீதிமன்றம் இதைப் பயன்படுத்தும். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அடுத்த கட்டமாகப் காவல்துறையினர் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளனர்.
இதையும் படிக்க : எத்தனை முறை தோற்றாலும் தோற்பேன்! ஆனால் பொது வேட்பாளராக போட்டியிட யார் ஆதரவையும் கேட்கமாட்டேன்.. சீமான் ஆவேசம்!




மாவட்ட ஆட்சியருக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பித் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, 4 பேர் கொண்ட விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆளுநரைச் சந்தித்த உதயநிதி
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ஆர்லேகரை நேரில் சந்தித்து முறையிட்டார். மேலும், ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால், விசாரணையைச் சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, திமுக சார்பில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என். சோமு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். குற்றச்சாட்டுகள் குறித்து எம்எல்ஏ அருள் விக்னேஷ் தரப்பிலோ, தவெக தரப்பிலோ இதுவரை விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.
இதையும் படிக்க : தவெக எம்எல்ஏ விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை.. தமிழக அரசு வேகமாக செயல்படுகிறது.. தொல்.திருமாவளவன்!
ஆளநரை சந்தித்தது தொடர்பாக பதிவிட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளுங்கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் – காணாமல் போகும் குழந்தைகள் – தொடரும் காவல் நிலைய மரணங்கள் – போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் இப்படி தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு மிகப்பெரிய சவாலாக இந்த ஆளுங்கட்சியினர் இருந்து வருகின்றனர். எனவே, இந்த சம்பவங்கள் தொடர்பாக முதலமைச்சரிடம் உரிய விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் அவர்களிடம் வலியுறுத்தினோம் என்று குறிப்பிட்டுள்ளார்.