எத்தனை முறை தோற்றாலும் தோற்பேன்! ஆனால் பொது வேட்பாளராக போட்டியிட யார் ஆதரவையும் கேட்கமாட்டேன்.. சீமான் ஆவேசம்!
Naam Tamilar Katchi Seeman : எத்தனை முறை தோற்றாலும் தோற்பேனே தவிர தமிழக இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு யாரிடமும் ஆதரவு கேட்டு நிற்க மாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆக்ரோஷமாக தெரிவித்தார் .
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட வேண்டி எவனிடமும் போய் நின்று ஆதரவு கேட்க மாட்டேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இனி எதுவும் பேசுவதில்லை. செயல்தான். இனி செயல் மட்டுமே நமது அடையாளம் ஆகும். எவ்வளவு பெரிய கோட்டை ஆனாலும் சின்ன சாவி துவாரத்தில் தான் திறக்கும். நமது கோட்டையை அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து தான் திறக்கிறோம். நாதக சீமான் பொது வேட்பாளர் என கற்பனையாக கூறி வருகின்றனர். எத்தனை முறை நான் தோற்றாலும் தோற்பேனே தவிர யாரிடமும் போய் நின்று, என்னை ஆதரிக்குமாறு கேட்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் 6 தொகுதிகளில் இடைத்தேர்தல்
தமிழகத்தில் திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை, பெருந்துறை, கொளத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது வேட்பாளராக போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
மேலும் படிக்க: ஊழலுக்கு எதிரான நடவடிக்கையால் சிலரின் பேஸ்மட்டம் ஆட்டம் கண்டுள்ளது..கல்வி விருது வழங்கும் விழாவில் முதல்வர் விஜய்!
அம்பை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த சீமான்
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் உங்களை ஆதரித்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதில் அளித்த சீமான், பசியில் சோறு கிடைக்காத என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அப்போது, பிரியாணி தருகிறேன் என்று கூறினால், வேண்டாம் என்று கூறுவார்களா. நாங்கள் கண்டிப்பாக அதனை ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்திருந்தார். அத்துடன், அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த சீமான்
ஏற்கெனவே, கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்டு இருந்தார். ஆனால், அந்தத் தொகுதியில் அவர் தோல்வியை சந்தித்திருந்தார். இந்த நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில்தான், பொது வேட்பாளர் விவகாரம் குறித்து இருவேறு கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தவெக எம்எல்ஏ விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை.. தமிழக அரசு வேகமாக செயல்படுகிறது.. தொல்.திருமாவளவன்!