கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்புக்கு வந்த காவலர்.. பள்ளி கழிவறையில் சடலமாக மீட்பு.. திருவண்ணாமலையில் நடந்த சம்பவம்!
Police Body Recovered In Tiruvannamalai : திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த காவலர் அரசுப் பள்ளி கழிவறையில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர் .
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த காவலர் அரசு பள்ளி கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை உண்ணாமுலையம்மன் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றிருந்தது. இந்த விழாவில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்கள், மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்கியிருந்தனர். இந்த நிலையில், கார்த்திகை தீபத்திருவிழா முடிவடைந்த நிலையில் காவலர்கள் அனைவரும் தங்களது மாவட்டங்களுக்கு திரும்பி சென்றனர். அதில், ஒரு காவலர் மட்டும் மங்கலம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி கழிவறையில் இறந்த நிலையில் சடலமாக கிடந்தார்.
அரசு பள்ளி கழிவறையில் காவலர் சடலம்
இன்று வியாழக்கிழமை காலை பள்ளி வழக்கம் போல திறக்கப்பட்ட நிலையில், கழிவறைக்கு சென்ற பணியாளர்கள் உள்பக்கமாக பூட்டி இருந்த கழிவறையை திறக்க முடியாமல் இருந்ததைப் பார்த்து சந்தேகமடைந்தனர். உடனே, அந்த கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு ஒரு காவலர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக, அரசு பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். அவர், மங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
மேலும் படிக்க: எத்தனை முறை தோற்றாலும் தோற்பேன்! ஆனால் பொது வேட்பாளராக போட்டியிட யார் ஆதரவையும் கேட்கமாட்டேன்.. சீமான் ஆவேசம்!
உயிரிழந்த காவலரின் அடையாளம் தெரிந்தது
அதன் அடிப்படையில், மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த காவலரின் சடலத்தை மீட்டு உடல் கூராய்வு மேற்கொள்வதற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், கழிவறையில் உயிர் இழந்து கிடந்தது அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வடிவழகன் ( 38 வயது) என்பதும், இவர், சென்னை, ஆவடி சிறப்பு காவலர் 13- ஆம் அணியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை
அத்துடன், கழிவறைக்கு சென்ற காவலர் எப்படி உயிரிழந்தார். அவருக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதா அல்லது விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், காவலர் வடிவழகனின் குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த காவலர் கழிவறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: குழந்தைகளை காட்டில் விட்டு சென்றனரா பெற்றோர்? வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த கலெக்டர்!