“திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிஷ்டவசமானது தான்!”.. துரை வைகோ எம்பி ஆவேசம்!
10 ஆண்டுகளாக இந்த (திமுக) கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வருகிறோம். தேர்தல் நேரத்தில் கடைசி நேரத்தில் எங்களது பிடிவாதம் காரணமாகக் கூட்டணித் தலைமைக்கு எந்தவொரு கஷ்டமும், அதிருப்தியும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், தேவையில்லாத சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காகவுமே அந்தச் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டது" என்றார்.
சென்னை, ஜுன் 4: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக சார்பில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டது துரதிஷ்டவசமானது தான் என்றும், அதில் தான் கூறிய கருத்து வாஸ்தவமானது தான் என்றும் மதிமுக முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முக்கிய அடையாளமாக விளங்கும் துரை வைகோ, செய்தியாளர்களைச் சந்தித்தபோது தேர்தல் சின்னம் மற்றும் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்துத் தனது குமுறலை வெளிப்படுத்தினார்.
இதையும் படிக்க: மின்சாரத்துறை பகீர்.. காணாமல்போன ஹார்ட் டிஸ்க்குகள்.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்கள்!
அவர் பேசுகையில், “ஒரு கட்சியின் கொடியும் சின்னமும் தான் அந்த இயக்கத்தின் அடிப்படை அடையாளங்கள் ஆகும். அப்படி இருக்கும்போது, ஒரு இயக்கம் தனது சொந்தச் சின்னத்தில் நிற்காமல் மற்றொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடும்போது அது தனது தனித்துவத்தை முற்றிலும் இழந்துவிடுகிறது. திமுக சின்னத்தில் நின்றது துரதிஷ்டம் என்று நான் கூறியது வாஸ்தவமான உண்மை. எங்களது தொண்டர்களின் மனக்குமுறலையும், கட்சி நிர்வாகிகளின் மனவேதனையையும்தான் நான் வெளிப்படுத்தினேன். இதில் எந்தத் தவறும் இல்லை; இதற்காக யார் விமர்சித்தாலும் எதிர்காலத்தில் இதனை நான் ஆயிரம் முறை கூறுவேன்” என்று உறுதியுடன் தெரிவித்தார்.
ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தம்:
இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதில் இருக்கும் பலருக்கும் தெரியாத ஒரு முக்கிய ஜனநாயகச் சிக்கலைத் துரை வைகோ இதன்போது அம்பலப்படுத்துவதாக கூறினார். அதாவது, “ஒரு கட்சியின் வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றால், அவர் முதலில் தான் சார்ந்திருக்கும் சொந்த இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன் பிறகு, எந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறாரோ அந்தச் சின்னத்திற்குரிய கட்சியில் உறுப்பினராக இணைய வேண்டும். இப்படித் தனது சொந்தக் கட்சியையே ராஜினாமா செய்துவிட்டுப் போட்டியிடுவது எந்த வகையில் நியாயம்? இதுதான் ஜனநாயகமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“கூட்டணிக்கு கஷ்டம் வரக்கூடாது என்றே நின்றோம்”
அப்படியிருந்தும் ஏன் அந்தச் சின்னத்தில் போட்டியிட்டீர்கள் என்ற கேள்விக்கு விளக்கமளித்த அவர், “நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக இந்த (திமுக) கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வருகிறோம். தேர்தல் நேரத்தில் கடைசி நேரத்தில் எங்களது பிடிவாதம் காரணமாகக் கூட்டணித் தலைமைக்கு எந்தவொரு கஷ்டமும், அதிருப்தியும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், தேவையில்லாத சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காகவுமே அந்தச் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டது” என்றார்.
எதிர்கால நிலைப்பாடு மற்றும் கூட்டணி:
எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய துரை வைகோ, “இனிவரும் காலங்களில் ஒரு இயக்கம் மற்றொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்பதுதான் எங்களது பொதுக்குழுவில் எங்களது இயக்கத்தைச் சார்ந்த அத்தனை பேரின் மிக முக்கியமான கோரிக்கையாக இருக்கும்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இதையும் படிக்க: திட்டமிட்டபடி தனிக்கட்சி தொடங்குவதில் அண்ணாமலை உறுதி.. நாளை முக்கிய அறிவிப்பு?
மேலும், தமிழ்நாட்டில் தற்போது பேசப்பட்டு வரும் கூட்டணி ஆட்சி முறை குறித்துப் பேசிய அவர், “கூட்டணி ஆட்சி என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு ஆகும். அதனை ஒரு நல்ல விஷயமாகப் பார்க்க வேண்டும் . கூட்டணியில் ஒரு அரசு இருக்கும்போது, அந்த அரசாங்கம் ஏதேனும் மக்களுக்கு எதிரான முடிவுகளை எடுத்தால், அதனைத் தட்டிக்கேட்பதற்கும் திருத்துவதற்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கும. கூட்டு முடிவுகள் எடுக்கப்படும்போது அது அரசாங்கத்திற்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது” என்று தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.