AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக – அதிமுக கூட்டணி ஆட்சி.. தவெக எம்.எல்.ஏக்கள் 107 பேர் ராஜினாமா செய்ய திட்டம்? என்ன நடக்கிறது?

நேற்றைய தினம் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்தனியாக தங்களது சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டன. இதில், இரண்டு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் சூசகமாக சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, கட்சியின் நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும், அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக – அதிமுக கூட்டணி ஆட்சி.. தவெக எம்.எல்.ஏக்கள் 107 பேர் ராஜினாமா செய்ய திட்டம்? என்ன நடக்கிறது?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 May 2026 07:05 AM IST

மே 8, 2026: அதிமுக – திமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தால், தமிழக வெற்றி கழகத்துடன் இருக்கக்கூடிய 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், தமிழக அரசாக இன்னும் பொறுப்பேற்க முடியாமல் இருக்கிறது. ஏனென்றால், ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்ற பெரும்பான்மை தேவைப்படும் சூழல் உள்ளது.

பெரும்பான்மை பெற்றும் ஆட்சி அமைக்க முடியாத சூழல்:

தற்போது வரை தமிழக வெற்றி கழகத்துடன் 108 எம்.எல்.ஏ.க்கள், கூடுதலாக திமுகவிலிருந்து பிரிந்து வந்த காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 112 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். மேலும் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர்.

இதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவு கோரி கடிதம் எழுதியிருக்கிறார். அவர்களது முடிவு இன்று கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இரண்டு முறை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், பெரும்பான்மை இல்லாத சூழலில் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என தமிழக ஆளுநர் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

அதிமுக – திமுக கூட்டணி ஆட்சி?

தமிழக வெற்றி கழகம் ஒரு பக்கம் ஆட்சி அமைக்க முயன்று வந்தாலும், மற்றொரு பக்கம் திமுக மற்றும் அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பது அரசியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு பெரிய திருப்பமாக அமைந்திருக்கிறது.

இதற்கு மத்தியில், நேற்றைய தினம் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்தனியாக தங்களது சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டன. இதில், இரண்டு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் சூசகமாக சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, கட்சியின் நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும், அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சி நிச்சயம் அமையும்” என ஒரு குறியீட்டையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் திமுக – அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இரண்டு கட்சிகளும் சொன்ன சூசக மெசேஜ்:

திமுக தரப்பில் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய சூழல் வந்தாலும் அதை ஏற்க தயார்” என குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்கும் வகையில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தவெகவுக்கு எதிராக “திமுக – அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி”.. புயலை கிளப்பிய அருண்ராஜ்..

மறுபக்கம், இந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தற்போது வரை வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. இந்த சூழலில், பெரும்பான்மையுடன் திமுக மற்றும் அதிமுக இணைந்து வந்தாலும் ஆட்சி அமைக்கலாம் என தமிழக ஆளுநர் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தவெகவின் அடுத்த மூவ்:

இந்த நிலையில், இதுபோன்ற அரசியல் மாற்றங்கள் நடைபெறும் பட்சத்தில், தமிழக வெற்றி கழகத்தின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியல் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வரும் சூழலில், அடுத்து என்ன நடக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.

Follow Us