சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் குவிய வாய்ப்பு?.. மக்கள் நடமாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடு.. போலீஸ் குவிப்பு!!
High Alert at Chennai Marina Beach: நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மெரினா கடற்கரையில் திடீர் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து, சென்னை மெரினா சர்வீஸ் சாலையில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை, ஜூலை 23: டெல்லியில் தீவிரமடைந்து வரும் மாணவர் போராட்டங்களின் தாக்கம் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் திரண்டு திடீர் போராட்டம் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்திற்கு அதிரடிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுப் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது!”.. மாணவர்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!
போராட்டம் தவிர்க்க முன்னெச்சரிக்கை:
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திரண்டு நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டத்தைப் போல, தற்போதும் நீட் விவகாரத்திற்காக மாணவர்கள் திரண்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சென்னை காவல்துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
4 கி.மீ தூரத்திற்குப் பேரிகார்டுகள்:
மெரினா உழைப்பாளர் சிலையில் இருந்து பட்டினம்பாக்கம் வரை உள்ள சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிலான காமராஜர் சாலை அணுகுசாலை முழுவதிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுப் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கும், இளைப்பாறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகனக் கட்டுப்பாடு:
சர்வீஸ் சாலையில் கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்குக் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே தீவிர சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
கல்லூரிகள் நிறைந்த பகுதி:
மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் மாநிலக் கல்லூரி, ராணி மேரி கல்லூரி மற்றும் சென்னை பல்கலைக்கழக வளாகம் ஆகிய முக்கிய கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இங்கிருந்து மாணவர்கள் திடீரெனக் கடற்கரைக்குத் திரண்டு விடக்கூடாது என்பதற்காகக் கல்லூரிகளின் வாயில்கள் அருகே பட்டினம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போலீஸ் தீவிர கண்காணிப்பு:
மேலும், இந்தப் பாதை முதலமைச்சர் தனது இல்லத்திற்குச் சென்று வரும் முக்கிய வழித்தடமாக இருப்பதாலும், மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய 2 துணை ஆணையர்கள் நேரடியாக மெரினாவில் தங்கியிருந்து ரோந்துப் பணிகளையும் பாதுகாப்பையும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: “தமிழகத்திலும் ஆசிரியர் நியமனத் தேர்வில் வினாத்தாள் கசிந்தது!”.. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!!
கடற்கரையில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மெரினா கடற்கரை பகுதியே தற்போது மனித நடமாட்டமின்றிச் சற்றே வெறிச்சோடிக் காணப்படுகிறது.