சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: ஜெம் வீரமணி குண்டர் சட்டத்தில் கைது
Gem Veeramani Booked Under Goondas Act : சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி உள்ளிட்ட மூவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அக்டோபர் 1, 2026 இன்று உத்தரவிட்டார்.
சென்னை, அக். 1: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி உள்ளிட்ட மூவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அக்டோபர் 1, 2026 இன்று உத்தரவிட்டார். ஏற்கெனவே 2 போக்சோ வழக்குகளை எதிர்கொண்டு வரும் வீரமணிக்கு, இந்த நடவடிக்கை மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெம் வீரமணி குண்டர் சட்டத்தில் கைது
சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக காவல்துறைக்கு வந்த புகாரைத் தொடர்ந்து, ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி அண்மையில் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, வீரமணியின் வீட்டில் பணியாளராக இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தில் முன்பு பணியாற்றிய கணேசன் ஆகிய மூவரையும் போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர். தற்போது 4 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : சென்னை வாசிகளுக்கு மெகா குட் நியூஸ்.. இனி பரனூர் டோல்கேட்டில் நிக்கவே வேண்டாம்… வந்துச்சு புது டெக்னாலஜி!




வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, 4 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 2025 ஆம் ஆண்டு வீரமணி மீது வழக்குப் பதிவான நேரத்தில், கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்தக் குற்றச்சாட்டு குறித்தும் சிறப்புக் குழு தனியாக விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த மற்றொரு புகாரின் அடிப்படையில், வீரமணி மீது 2வது போக்சோ வழக்கும் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. அவர் தொடர்பாக காவல்துறைக்கு புதிய புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் தான் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
மேலும் 11 பேர் மீது குண்டர் சட்டம்
ஜெம் வீரமணி வழக்கு மட்டுமின்றி, கொலை, கொலை முயற்சி, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் கைதான மேலும் 11 பேர் மீதும் இன்று குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பிரயோகிக்கப்பட்டது. அதன் படி அடையாறு சாஸ்திரி நகரில் நடந்த கண்ணன் கொலை வழக்கில் கைதான சதீஷ்குமார், மணிகண்டன், ஹரிஹரன், பரணிதரன், ராகேஷ் ஆகிய 5 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : திருச்சி அருகே கோர விபத்து.. லாரி – கார் பயங்கர மோதல்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இருவர் மரணம்!
மேலும் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய கௌதம், ராகேஷ் ஆகிய இருவர் மீதும், வியாசர்பாடியில் நடந்த மதன் கொலை வழக்கில் கைதான சரத் என்பவர் மீது வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லையில் பதிவான கொலை முயற்சி வழக்கில் கைதான பரத் மற்றும் கொடுங்கையூர் காவல் நிலையத்தின் கொலை முயற்சி வழக்கில் கைதான விஜய் என்பவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், சென்னையில் இன்று ஒரே நாளில் மொத்தம் 14 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.