சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு என்ற பெயரில் அச்சுறுத்தல்; த.வெ.க. அரசை கண்டித்து தங்கம் தென்னரசு அறிக்கை
உரிமம் பெற்று செயல்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையகங்களில் ஆய்வு என்ற பெயரில் நடைபெறும் அச்சுறுத்தல்களையும் கெடுபிடிகளையும் தமிழக வெற்றிக் கழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தொழிலை முடக்குவதற்குப் பதிலாக பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விழிப்புணர்வும் ஆலோசனைகளும் வழங்க வேண்டும் என்றும் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
ஆகஸ்ட் 3, 2026: சிவகாசியில் உரிமம் பெற்று சட்டப்பூர்வமாக செயல்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையகங்களில், “ஆய்வு” என்ற பெயரில் அதிகாரிகள் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ள முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, இதனை வன்மையாக கண்டிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், சிவகாசியின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ரூ.6000 கோடி வர்த்தகம் நடைபெறும் தொழில்:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விருதுநகர் மாவட்டம் முக்கிய பங்காற்றுவதாகவும், குறிப்பாக சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் பட்டாசு உற்பத்தித் தொழில், ஏழை மற்றும் எளிய தொழிலாளர்களின் முக்கிய வாழ்வாதாரமாக திகழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி வர்த்தகம் நடைபெறும் இந்தத் தொழிலை நம்பி 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருவதாகவும், நாட்டின் மொத்த பட்டாசுத் தேவையில் 80 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி சிவகாசியிலிருந்தே பூர்த்தி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிரடி ஆய்வு” என்ற பெயரில் தேவையற்ற கெடுபிடிகள்:
சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுவோர் அல்லது பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும், மனித உயிர்களின் பாதுகாப்பே முதன்மை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், அரசின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, சம்பந்தப்பட்ட துறைகளிடம் உரிய உரிமங்களை பெற்று, ஆண்டுதோறும் அவற்றை புதுப்பித்து தொழில் நடத்தி வரும் நிறுவனங்கள் மீது “அதிரடி ஆய்வு” என்ற பெயரில் தேவையற்ற கெடுபிடிகள் நடத்தப்படுவது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழக வெற்றி கழக அரசின் முதல் பட்ஜெட்.. வெளியாகும் முக்கிய அறிவிப்புகள் என்ன? எகிறும் எதிர்ப்பார்ப்பு..
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிக்கும் நேரத்தில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் தொழில்முனைவோரிடம் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், சட்டப்பூர்வமாக வரி செலுத்தி தொழில் நடத்துபவர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்படும்:
மேலும், இந்தத் தொழிலில் பெருமளவில் கிராமப்புற பெண்கள் மற்றும் எளிய மக்கள் பணியாற்றி வருவதால், தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் பாதிக்கப்படும் பட்சத்தில் தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்படும் என்றும், அதன் தாக்கம் விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: பதைபதைக்கும் விபத்து.. மதுரை அருகே ஜேசிபி மீது கார் மோதி கோர விபத்து.. ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
எனவே, உரிமம் பெற்று செயல்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையகங்களில் ஆய்வு என்ற பெயரில் நடைபெறும் அச்சுறுத்தல்களையும் கெடுபிடிகளையும் தமிழக வெற்றிக் கழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தொழிலை முடக்குவதற்குப் பதிலாக பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விழிப்புணர்வும் ஆலோசனைகளும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயக போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும்
மேலும், உரிமம் பெற்ற பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களை அச்சுறுத்தும் போக்கு தொடருமானால், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அனுமதி பெற்று, பட்டாசு தொழில் உரிமையாளர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலனைக் காக்க சிவகாசியில் மாபெரும் ஜனநாயக போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.