இன்று இயக்கம்.. நாளை கட்சி.. அடுத்த தேர்தலில் நிச்சயம் போட்டி – அண்ணாமலை மாஸ்டர் பிளான்!
Annamalai New Party: புதிய கட்சியை தொடங்கிய அண்ணாமலை. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு. பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகி, தமிழக அரசியல் களத்தின் கவன ஈர்ப்பு மையமாக மாறியுள்ளார் அண்ணாமலை. அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வதாக பாஜக தலைமையும் அறிவித்துள்ளது.
ஜூன் 5, 2026: புதிய கட்சியை தொடங்கிய அண்ணாமலை. இது தொடர்பாக அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகியுள்ள முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, புதிய அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை:
தமிழக அரசியல் களம் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், பாஜகவிலிருந்து விலகுவதாக அண்ணாமலை ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்காக அவர் சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று, பாஜக மேலிட தலைவர்களான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
இந்த நிலையில், ஜூன் 5ஆம் தேதி காலை அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜக மேலிடம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து, தனது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து அண்ணாமலை நேரலையில் உரையாற்றினார்.
மேலும் படிக்க: “ரஜினிகாந்த் அழைப்பை மறுத்து மன்னிப்பு கேட்டேன்”.. ரகசியம் உடைத்த அண்ணாமலை!!
புதிய அரசியல் கட்சியை தொடங்கும் அண்ணாமலை:
Let’s step up, take action, and be the change.
Join here to begin our political movement! https://t.co/oVURDAxIE7 https://t.co/XROXxAohTq
— K.Annamalai (@annamalai_k) June 5, 2026
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளேன். அது மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்டதாக இருக்கும். முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி இந்த இயக்கம் செயல்படும்” என தெரிவித்தார்.
மேலும், “புதிய அரசியல், புதிய பாதை, புதிய இயக்கம் இன்று முதல் தொடங்குகிறது. என்னுடைய கருத்துகளுக்கு பாஜக தலைமை செவிசாய்க்கவில்லை. எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழகத்தின் அரசியல் அடிப்படை கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் பாஜகவிலிருந்து விலகியுள்ளேன்” என்றார்.
“தமிழ்நாட்டின் அடையாளத்தோடு பாஜக இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் தேசிய கட்சிகளின் மொழி தமிழக மக்களுக்கு புரியவில்லை. தமிழக மக்களின் மனநிலைக்கு ஏற்ப பேச முயற்சி செய்து ஓரளவு வெற்றியும் பெற்றேன்” என்றும் அண்ணாமலை கூறினார்.
ரஜினிகாந்தின் அழைப்பிற்கு நோ சொன்ன அண்ணாமலை:
மேலும், “பாஜகவில் இருந்த 6 ஆண்டுகளாக நான் எந்த உரிமையையும் விட்டுக்கொடுக்கவில்லை. 2020ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டபோது, அவரது கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். ஆனால் அப்போதே நான் அந்த அழைப்பை மறுத்து பாஜகவில் இணைய முடிவு செய்தேன்” என்றும் தெரிவித்தார்.
புதிய கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசிய அண்ணாமலை, “நமது இயக்கத்தில் நிரந்தர தலைவர், நிரந்தர எம்.பி., எம்.எல்.ஏ. என்ற அமைப்பு இருக்காது. எல்லோருக்கும் அரசியலை கற்றுக்கொடுத்து படிப்படியாக இயக்கத்தை வலுப்படுத்துவோம். எடுத்த உடனே ஒரு கட்சியை உருவாக்க முடியாது. சிறந்த சிந்தனையாளர்களையும் இளைஞர்களையும் அரசியலுக்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.
முதலில் இயக்கம் அதன்பின் கட்சி:
“‘We The Leader’ (wetheleader.org) என்ற இணையதளம் மூலம் அனைவரும் இந்த இயக்கத்தில் இணையலாம். சமூக வலைதளங்களில் ஆபாச அரசியல் வேண்டாம். நல்ல கருத்துகளை பேச வேண்டும். கீழிருந்து கட்டப்படும் ஒரு இயக்கமாக இதை உருவாக்க உள்ளோம்” என்றும் குறிப்பிட்டார்.
மேலும், “தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் எப்படி பார்க்கிறேனோ, அதேபோல பாஜகவையும் பார்ப்பேன். யாரிடமும் எந்தவித பகையும் இல்லை. மக்கள் தரத்தை பார்த்து நம்மை தேர்வு செய்வார்கள். தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்றுவதே எங்கள் இலக்கு” என அண்ணாமலை தெரிவித்தார்.
அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வரவிருக்கும் தேர்தல்களில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.