தனியார் பள்ளிகளில் கட்டண விவர பலகை.. அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு!!
சட்டத்தின்படி தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்கள் 'பொது அதிகார அமைப்பு' என்ற வரம்பிற்குள் வராத நிலையில், அவற்றுக்கு உத்தரவிட மாநில தகவல் ஆணையத்திற்கு எவ்வித அதிகார வரம்பும் இல்லை. மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தனியார் பள்ளிகள் இயக்குநர் வெளியிட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
சென்னை, ஜுன் 4: தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளின் அறிவிப்புப் பலகைகளிலும், அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை கட்டாயமாக வெளியிட வேண்டும் என்ற அரசின் சுற்றறிக்கைக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்விக் கட்டண விவகாரத்தில் கல்வி நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியம் என்று தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் அண்மையில் குறிப்பிட்டிருந்தது.
இதையும் படிக்க: திட்டமிட்டபடி தனிக்கட்சி தொடங்குவதில் அண்ணாமலை உறுதி.. நாளை முக்கிய அறிவிப்பு?
தனியார் பள்ளிகளின் விளம்பரப் பலகை:
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த ஆணையம், அரசு நிர்ணயித்துள்ள கட்டண விவரங்களைத் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் விளம்பரப் பலகைகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்திலும் இதனை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகத்திற்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில், கடந்த ஜூன் 1-ஆம் தேதி தனியார் பள்ளிகள் இயக்குநர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களின் கட்டண விவரங்களை ஜூன் 5-ஆம் தேதிக்குள் விளம்பரப் பலகைகளில் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அரசின் முடிவை எதிர்த்து வழக்கு:
இந்த வழக்கில் தனியார் பள்ளிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளதாவது, அரசின் இந்த அதிரடிச் சுற்றறிக்கையை எதிர்த்து, தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தரப்பில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களின் மீது எவ்வித அதிகார வரம்பும் இல்லாத சூழலில், மாநில தகவல் ஆணையம் இந்த வழக்கை விசாரித்துள்ளது.
இதையும் படிக்க: “பழி போடுவதால் மாற்றம் வராது.. தேர்தல் மனநிலையிலிருந்து வெளியே வாங்க”.. தவெக அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
ஆராய்ந்து பார்க்கப்படவில்லை:
தகவல் அறியும் உரிமைச் சட்டமானது, தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்துமா என்பது குறித்து எந்தவொரு சட்டபூர்வ ஆய்வும் செய்யப்படவில்லை. சட்டத்தின்படி தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்கள் ‘பொது அதிகார அமைப்பு’ என்ற வரம்பிற்குள் வராத நிலையில், அவற்றுக்கு உத்தரவிட மாநில தகவல் ஆணையத்திற்கு எவ்வித அதிகார வரம்பும் இல்லை. மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தனியார் பள்ளிகள் இயக்குநர் வெளியிட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கதானது விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.