தளபதி விஜய் சாலை – தீர்மானம் நிறைவேற்றிய கிராம மக்கள் – என்ன காரணம்?
Thalapathy Vijay Salai : பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மேற்கொண்ட போராட்டத்துக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். தவெக ஆட்சி அமைந்த நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக தகவல்கள் பரவின.
காஞ்சிபுரம், ஆகஸ்ட் 15 : பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஏகனாபுரம் என்ற கிராமத்தில் சுநந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தங்கள் கிராம சாலையை தளபதி விஜய் சாலை என மாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் 13 கிராமங்களை உள்ளடக்கி கிட்டத்தட்ட 4, 791 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
தளபதி விஜய் சாலை என மாற்ற தீர்மானம் நிறைவேற்றிய கிராம மக்கள்
இந்த நிலையில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தவெக தலைவராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு முதல்வர் விஜய் ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் தவெக ஆட்சி அமைந்த நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக தகவல்கள் பரவின.
இதையும் படிக்க : 80- ஆவது சுதந்திர தின விழா.. முதல்வர் விஜய்யிடம் விருது பெற்றவர்கள் விவரம்!




இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்ட 13 கிராமங்களில் ஏகனாபுரம் கிராமமும் ஒன்று. இந்த நிலையில் ஆகஸ்ட் 15, 2026 இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றினர். மேலும், ஏகனாபுரம் கிராம சாலையை தளபதி விஜய் சாலை என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தையும் கிராம மக்கள் நிறைவேற்றினர்.
ஏகனாபுரம் கிராமத்தினர் இதுவரை 7 முறை கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தும், 16 முறை கிராம சபை கூட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பும் தெரிவித்தும் 1,100 நாட்களுக்கும் மேலாக அவர்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : போலீசார் ஹெல்மெட் போடவில்லையா? இனி பைக் சீஸ்… காவல்துறை அதிரடி உத்தரவு!
இதற்கிடையில் பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடருகிறதா அல்லது கைவிடப்படுகிறதா என திமுக எம்.பி. தயாநிதி மாறன், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் “ஞபரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இந்த திட்டத்தை கைவிடுவது தொடர்பாக 2026 மே மாதத்துக்கு பிறகு தமிழக அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்றார். இந்த திட்டத்தில் நிலம் கையகப்படுத்துலை அடிப்படையாகக் கொண்டே திட்டம் செயல்படுத்தப்படும் என்று விளக்கமளித்தார்.