8 மணி நேர மின் வெட்டு?…. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எழுப்பிய 4 கேள்விகள்!
MK Stalin Questions CM Vijay : தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான பரப்புரை அக்டோபர் 4, 2026 இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசுக்கும் முதல்வர் விஜய்யிடமும் 4 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 4 : தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான பரப்புரை அக்டோபர் 4, 2026 இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து வருகிற அக்டோபர் 6, 2026 தேர்தல் முடியும் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில்தேர்தல் பரப்புரை நிறைவுற்ற நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசுக்கு 4 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
மு.க.ஸ்டாலினின் 4 கேள்விகள்!
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளங்கள் மூலம் தவெக அரசுக்கு 4 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.
1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாக வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா?
2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கி நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா?
3. இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரித்த கட்சிகளே குற்றம் சாட்டுவதற்குப் பதில் என்ன?
4. குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? இனியும் தவெக அரசின் குதிரை பேரத்தின் அடுத்த SEASON தொடருமா?




இதையும் படிக்க : காணாமல் போன 4 பள்ளி மாணவர்கள் குரோம்பேட்டை ஏரியில் சடலமாக மீட்பு – பரபரப்பு சம்பவம்
தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக அவர் தனது பதிவில், திமுக உருவாக்கிய திட்டங்களை ஆய்வு செய்வது போல தினமும் ரீல்ஸ் போடுகிறீர்கள். அதைச் சுட்டிக்காட்டினால் மக்கள் பணத்தில் தானே செய்தீர்கள் எனக் கோபம் வருகிறது. கல்லணையைக் கரிகால சோழன் கட்டினார் என்றால் அவரே நேரில் சென்று செங்கல் எடுத்து வைத்தா கட்டினார்? தஞ்சைப் பெரிய கோயிலை ராஜராஜ சோழன் கட்டினார், அணைகளையும் பள்ளிக்கூடங்களையும் பெருந்தலைவர் காமராஜர் கட்டினார் என்று வரலாற்றில் படிக்கிறோம். இவர்கள் அனைவரும் சொந்தப் பணத்திலா இவற்றைச் செய்தார்கள்? இதே கேள்வியை நீங்கள் அவர்களிடம் கேட்பீர்களா அல்லது அவர்களையும் சேர்த்து அவமானப்படுத்துகிறீர்களா?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க : முதல்வர் விஜய் வரும் வழியில் போராட்டம் – நாதக வேட்பாளர் கைது – பரபரப்பு தகவல்
அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில், தவெகவினர் தோல்வி பயத்தில் வாக்காளர்களுக்கு ஆசை வார்த்தைகளைச் சொல்லியும், தவறான வழியில் ஈடுபட்டும், வாக்காளப் பெருமக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான செயல்களில் ஈடுபட்டு வருவதை மக்கள் நன்கு அறிவார்கள். கழகத்தின் வெற்றிக்கு துரோகம் இழைத்து, த.வெ.க. சார்பில் போட்டியிடும் இவ்விரு வேட்பாளர்களுக்கும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை என்று தெரிவித்திருந்தார்.