AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிரசாரத்தில் சிறுவனை பயன்படுத்தியதாக புகார்.. உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரத்தில் வழக்குப்பதிவு!!

FIR Registered Against Udhayanidhi Stalin: தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, பெரியார் சிலை அருகே சிறுவனை வைத்து முதலமைச்சரை அவமதிக்கும் வகையில் பேச வைத்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகாரில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசாரத்தில் சிறுவனை பயன்படுத்தியதாக புகார்.. உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரத்தில் வழக்குப்பதிவு!!
உதயநிதி ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 04 Oct 2026 11:04 AM IST

திருப்பூர், அக்.04: தாராபுரம், மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டி சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களின் காரசாரமான குற்றச்சாட்டுகளும் பிரசார உத்திகளும் விவாதப் பொருளாகி வருகின்றன. தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாகப் பல்வேறு அரசியல் கட்சியினரும் மாறி மாறி தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையிடம் புகார்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில், தாராபுரத்தில் நான்கு இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுகவின் இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மீது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: “கையில் பென்சில், போனில் கூகுள் பே!”.. இடைத்தேர்தலில் ‘ஊரையே விலை பேசும்’ புதிய உத்தி.. சிபிஐ வீரபாண்டியன் கொந்தளிப்பு!!

தாராபுரம் பெரியார் சிலை அருகே நடந்த சம்பவம்:

தாராபுரம் டவுன் பெரியார் சிலை அருகே நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரசாரக் களத்தில் மேடையில் சிறுவன் ஒருவனைப் பயன்படுத்தி, தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேச வைத்ததாகவும், அந்தச் சிறுவன் மூலம் முதலமைச்சரை அவமானப்படுத்தும் வகையில் விமர்சன முன்வைப்புகளைச் செய்ய வைத்ததாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமீறலும் பாய்ந்த சட்டப் பிரிவுகளும்:

அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் அல்லது பரப்புரைகளின் போதோ குழந்தைகளையோ சிறுவர்களையோ ஈடுபடுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது எனத் தேர்தல் ஆணையம் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, குழந்தையை வைத்துத் தேர்தல் பிரசாரம் செய்தது உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் தாராபுரம் காவல் நிலையப் போலீசார் உதயநிதி ஸ்டாலின் மீது முதற்கட்ட வழக்குப் பதிவை (FIR) மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிக்க: “யார் பணத்தில் திட்டங்கள்?”.. முதல்வர் விஜய்யின் கேள்வியும்.. மு.க.ஸ்டாலினின் அதிரடி பதிலடியும்!!

காவல்துறையின் தொடர் விசாரணை:

இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஓரிரு நாட்களே எஞ்சியுள்ள சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியல் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகத் தாராபுரம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளையில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் தாராபுரம் தேர்தல் களத்தில் மேலும் சூட்டை அதிகரித்துள்ளது.

Follow Us