காணாமல் போன 4 பள்ளி மாணவர்கள் குரோம்பேட்டை ஏரியில் சடலமாக மீட்பு – பரபரப்பு சம்பவம்
Schoolchildren Found Dead : தாம்பரம் அருகே குரோம்பேட்டையில், விடுமுறையான அக்டோபர் 3, 2026 நேற்று விளையாடச் சென்ற 4 பள்ளி மாணவர்கள் பெரிய ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களும் இரண்டு சிறுமிகளும் ஒரே நேரத்தில் உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அக்டோபர் 4 : தாம்பரம் அருகே குரோம்பேட்டையில், விடுமுறையான அக்டோபர் 3, 2026 நேற்று விளையாடச் சென்ற 4 பள்ளி மாணவர்கள் பெரிய ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களும் இரண்டு சிறுமிகளும் ஒரே நேரத்தில் உயிரிழந்த இந்தச் சம்பவம், லட்சுமிபுரம் பகுதி மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காணாமல் போன 4 பள்ளி மாணவர்கள் குரோம்பேட்டை ஏரியில் சடலமாக மீட்பு
குரோம்பேட்டை லட்சுமிபுரம் கிருஷ்ணா தெருவில் வசிக்கும் தயாளனின் மகன் யுவனேஷ், அதே பகுதியைச் சேர்ந்த கிருபாகரனின் மகன் தேவதர்ஷன், லட்சுமிபுரம் ரங்கநாதசாமி 2வது தெருவைச் சேர்ந்த மாரியின் மகள் பூஜாரங்கநாதசாமி முதல் தெருவைச் சேர்ந்த லால்சந்தின் மகள் குஷி ஆகிய 4 பேரும் அக்டோபர் 3, 2026 நேற்று விடுமுறை என்பதால், நால்வரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : “பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு தகவல் கசிவு”.. கோவையில் கடற்படை மாலுமி கைது.. ஆந்திர போலீசார் நடவடிக்கை!!



இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் மாணவர்கள் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோரும் உறவினர்களும் பல இடங்களில் தேடினர். இதனையடுத்து அவர்கள் எங்கும் கிடைக்காத நிலையில், நான்கு குடும்பத்தினரும் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் தனித்தனியாகப் புகார் அளித்தனர். புகாரைப் பெற்ற போலீசார், மாணவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அக்டோபர் 4, 2026 காலை குரோம்பேட்டை பெரிய ஏரியில் நான்கு உடல்கள் ஒதுங்கிக் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாகக் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் உதவியுடன் நான்கு உடல்களையும் ஏரியிலிருந்து மீட்டனர். பின்னர் அவை பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
விடுமுறை நாளில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் அருகிலுள்ள ஏரிக்குக் குளிக்கச் சென்றிருக்கலாம் என்றும், அப்போது ஏரியில் இருந்த சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள குரோம்பேட்டை போலீசார், மாணவர்கள் ஏரிக்குச் சென்றது எப்படி, அவர்கள் மூழ்கியதற்கான முழுமையான காரணம் என்ன என்பது குறித்துத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் தாம்பரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட தங்கள் பிள்ளைகளின் உடல்களைப் பார்த்த பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர். இந்தக் காட்சி அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது.
இதையும் படிக்க : ஒரே மேடையில் தவெக, காங்கிரஸ், விசிக, சிபிஎம்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!!
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அதிகம் வசிக்கும் சென்னையிலேயே இது போன்ற சம்பவங்கள் நடந்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை மிகுந்த தீவிரமாக கண்காணிக்க வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.