Tamil Nadu Weather forecast: தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!
Tamil Nadu weather today: தமிழகத்தில் இன்று 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, வரும் நாட்களிலும் மழைக்கான வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. அதில், குறிப்பாக 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
சென்னை, அக்.04: தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் கேரளம் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிருந்து கேரளம்-கர்நாடகா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. சுமார் 3.1 கிமீ உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
இதையும் படிக்க: சீப் மினிஸ்டர் விஜய்.. தவெகவை ஒரு பொருட்டாக மதிக்காததே நாம் செய்த தவறு – மு.க ஸ்டாலின் தாக்கு..
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (அக்.04) நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு:
தொடர்ந்து, நாளை (அக்.05 & 06) மற்றும் நாளை மறுநாள் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதனைத்தொடர்ந்து, அக்.07 மற்றும் 08ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை நிலவரம்:
இன்று முதல் அக்.06ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.
இதையும் படிக்க: அந்தர் பல்டி பாமா.. கடந்த முறை மக்கள் திமுகவுக்கு அல்வா கொடுத்தனர்.. இந்தமுறை வாக்களிக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்..
சென்னையில் வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.