முதல்வர் ஜோசப் விஜய் வெற்றிக்கு எதிர்ப்பு.. திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பு!
Cm Joseph Vijay Victory : முதல்வர் ஜோசப் விஜய் வெற்றியை எதிர்த்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதில், பல்வேறு காரணங்களை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிட்டார். இதில், இனிகோ இருதயராஜை 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி விஜய் வெற்றி பெற்றார். இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட்டு வெற்றி நடைபெற்ற நிலையில், அந்த தொகுதியை தக்க வைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விஜய் ராஜினாமா செய்திருப்பதால் தன்னை வெற்றி பெற்றதாக வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும். 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை வைத்து விஜய் பிரச்சாரம் செய்துள்ளார்.
முதல்வர் விஜய் முறைகேடுகள் மூலம் வெற்றி
கட்சி அடையாளங்களுடன் தேவாலயத்திற்குள் சென்று விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், விஜய் பல்வேறு விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார். எனவே, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். விஜய் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதால் அந்த தொகுதியில் 2- ஆவது அதிக வாக்குகள் பெற்ற தன்னை ( இனிகோ இருதயராஜ்) திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்ட பூர்வமான வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.
மேலும் படிக்க: நடிகர் ரஜினிகாந்தை நயினார் நாகேந்திரன் சந்தித்தது ஏன்?




திருச்சி கிழக்கில் இடைத் தேர்தல் நடத்தக் கூடாது
மேலும், தன் மீது உள்ள வருமான வரி வழக்கை தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் விஜய் மறைத்துள்ளார். நடிகரும், அரசியல் கட்சிதலைவரான ஜோசப் விஜய்க்கு எதிரான வருமான வரி துறை வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன. தற்போது, நான் தொடர்ந்துள்ள இந்த தேர்தல் வழக்கு விசாரணை முடிந்து இறுதி தீர்ப்பு வரும் வரை திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான எந்த அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிடக்கூடாது.
அரசியல் களத்தில் பேசும் பொருளான வழக்கு
இதற்காக இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் தமிழக வெற்றிக் கழக்தின் தலைவர் ஜோசப் விஜய் மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தொடர்ந்துள்ள இந்த வழக்கு, தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிலும் குறிப்பாக திருச்சி மாவட்ட அரசியலில் பெரிதளவில் பேசும் பொருளாகி உள்ளது.
மேலும் படிக்க: குதிரை பேரம்.. ஆதாரங்கள் இல்லாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி..