AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக, அண்ணாமலை தரப்பு.. என்ன செய்யப்போகிறார் விராலிமலை ‘கிங் மேக்கர்’?

விஜயபாஸ்கரின் முதல் சாய்ஸ் தவெக-வாக இருந்தாலும், மறுபுறம் ஆளும் கட்சியின் திருச்சி (மலைக்கோட்டை) அமைச்சர் ஒருவரும், மூத்த நிர்வாகிகளும் விஜயபாஸ்கரை திமுகவுக்குக் கொண்டு வரத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விராலிமலையில் தனிப்பட்ட செல்வாக்குள்ள அவரைத் தங்களது பக்கம் இழுப்பதன் மூலம் மத்திய மாவட்டங்களில் திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தலாம் என அவர்கள் திட்டமிடுகின்றனர்.

விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக, அண்ணாமலை தரப்பு.. என்ன செய்யப்போகிறார் விராலிமலை ‘கிங் மேக்கர்’?
சி.விஜயபாஸ்கர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Jun 2026 06:38 AM IST

சென்னை, ஜுன் 17: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, அதிமுகவின் முக்கிய தூண்களில் ஒருவராகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததோடு, அதிமுகவிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியுடன் ஏற்பட்ட அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த அதிரடியான முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த சி.விஜயபாஸ்கர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு படித்துக்கொண்டிருந்த போதே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஈர்ப்பால் அதிமுகவில் இணைந்தார்.

இதையும் படிக்க: மனவலியோடு அதிமுகவில் இருந்து விலகுகிறேன்.. ராஜினாமா செய்த கையோடு சி. விஜயபாஸ்கர் அதிரடி முடிவு..

விராலிமலையின் ‘கிங் மேக்கர்’:

மாணவர் அணியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய இவர், 2001-ம் ஆண்டு தனது 26-வது வயதில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினரானார். அதன்பின், 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டுத் தொடர்ந்து வெற்றி பெற்றார். மொத்தம் 5 முறை சட்டமன்ற உறுப்பினர், 2013 முதல் 2021 வரை 8 ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதாரத் துறை அமைச்சர் என கடந்த 25 ஆண்டுகாலமாக அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாகவும், மாவட்டச் செயலாளராகவும் வலம் வந்தார்.

விலகலுக்கான பின்னணி என்ன?

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக தலைமை மீது சி.வி.சண்முகம் தரப்போடு இணைந்து சி.விஜயபாஸ்கரும் கேள்விகளை எழுப்பத் தொடங்கினார். இதன் விளைவாக, அவரது புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்தார் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த விஜயபாஸ்கர், இபிஎஸ்-ஐச் சந்திக்க மறுத்து வந்தார். தனது ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி மக்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட அவர், தற்போது ஒரு நிதானமான முடிவை எடுத்து, தனது அரசியல் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.

அடுத்தக்கட்டமாக தவெகவில் இணைகிறாரா?

சி.விஜயபாஸ்கரின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் இரண்டு தினங்களில் முதல்வர் விஜய் முன்னிலையில் அவர் தவெக-வில் இணையலாம் எனக் கூறப்படுகிறது. மற்ற தலைவர்களைப் போலன்றி, முதல்வர் விஜய்யுடன் நேரடியாகப் பேசக்கூடிய அளவிற்கு விஜயபாஸ்கருக்கு நெருக்கமான நட்பு உள்ளது.

தற்போதைய ஆளும் கட்சியாக தவெக இருப்பது அவருக்குச் சாதகமான அம்சம்.தேர்தலுக்கு முன்பாகவே தவெக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றும், அக்கட்சிக்கு 30%-க்கும் மேல் வாக்கு வங்கி உள்ளதெனக் கணித்து இபிஎஸ்-க்கு விஜயபாஸ்கர் அழுத்தம் கொடுத்தார். ஆனால் அதனை இபிஎஸ் அன்று ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

திமுக மற்றும் அண்ணாமலை தரப்பு பேச்சுவார்த்தை:

விஜயபாஸ்கரின் முதல் சாய்ஸ் தவெக-வாக இருந்தாலும், மறுபுறம் ஆளும் கட்சியின் திருச்சி (மலைக்கோட்டை) அமைச்சர் ஒருவரும், மூத்த நிர்வாகிகளும் விஜயபாஸ்கரை திமுகவுக்குக் கொண்டு வரத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விராலிமலையில் தனிப்பட்ட செல்வாக்குள்ள அவரைத் தங்களது பக்கம் இழுப்பதன் மூலம் மத்திய மாவட்டங்களில் திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தலாம் என அவர்கள் திட்டமிடுகின்றனர்.

இதேபோல், புதிய கட்சி தொடங்க ஆயத்தமாகி வரும் அண்ணாமலை தரப்பும் கடந்த சில நாட்களாக விஜயபாஸ்கருடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை தவெக முடிவில் ஏதேனும் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டுமே அவர் திமுக அல்லது இதர கட்சிகளை நாடுவார் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க: அதிமுகவில் அடுத்த அதிர்ச்சி.. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்.. தவெகவில் இணைகிறார்?

காலியாகும் விராலிமலை தொகுதி:

தமிழக அரசியலில் நிலவி வரும் அதிரடி மாற்றங்களுக்கு இடையே, ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சத்தியபாமா (தாராபுரம்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயகுமார் (பெருந்துறை) ஆகிய 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். தற்போது அவர்களைத் தொடர்ந்து சி. விஜயபாஸ்கரும் விலகியுள்ளதால், தமிழ்நாட்டில் ஏற்கனவே காலியாக இருந்த 5 சட்டமன்ற தொகுதிகளுடன் சேர்த்து, தற்போது ஆறாவதாக விராலிமலை தொகுதியும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் விலகி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us