“வாக்குறுதிகளை நிறைவேற்று!”.. தலைமைச் செயலகம் முன் கோணிப்பையைக் கட்டி விவசாயிகள் போராட்டம்.. குண்டுக்கட்டாகக் கைது!
Farmers Protest near Secretariat: சென்னை தலைமைச் செயலகம் முன்பாக உடலில் கோணிப்பையைக் கட்டிக்கொண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி டெல்டா மற்றும் கரும்பு விவசாயிகள் 25-க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். தவெக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை என்று குற்றம்சாட்டி விவசாயிகள் இந்த அதிர்ச்சிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
சென்னை, ஆகஸ்ட் 07: சென்னை தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் முன்பாக காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் உடலில் கோணிப்பையைக் கட்டிக்கொண்டு திடீரெனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தவெக அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சாதகமான அறிவிப்புகள் இல்லை என்றும் குற்றம்சாட்டிப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர்.
இதையும் படிக்க: தவெக அரசுக்கு திமுக வைத்த செக்.. முதல்வர் விஜய் அழைத்துள்ள எம்.பிக்கள் கூட்டத்தில் பங்கேற்க திமுக நிபந்தனை!!
வேளாண் பட்ஜெட் மீது அதிருப்தி:
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தலின் போது தவெக அரசு அளித்த வாக்குறுதிகள் மற்றும் நலத்திட்டங்கள் எதுவும் அதில் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகளும் விவசாய சங்கங்களும் முன்வைத்து வந்தன. இந்த நிலையில், இன்று பிற்பகல் 3:00 மணி அளவில் சட்டப்பேரவையில் அமைச்சர்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேச இருந்த சூழலில், அதற்கு முன்னதாக காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் தலைமைச் செயலகம் முன் திரண்டனர்.
கோணிப்பையைக் கட்டி போராட்டம்:
தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் நசுக்கப்பட்டுவிட்டதையும், தற்கொலை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதையும் குறியீடாக உணர்த்தும் வகையில், உடலில் கோணிப்பையைக் கட்டிக்கொண்டு விவசாயிகள் வீதியில் இறங்கி முழக்கமிட்டனர். தவெக அரசு வாக்குறுதி அளித்தபடி விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கும், கரும்புக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஆதார விலையை உடனடியாக அறிவித்து வழங்க வேண்டும். ஆகிய முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்திச் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிக்க: “பேப்பர் படித்திருந்தால் தெரிந்திருக்கும்!”.. சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் பதிலடி!
காவல்துறையினர் அதிரடி கைது:
சட்டமன்ற வளாகம் அருகே திடீரெனப் போராட்டம் வெடித்ததால், பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரையும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமைச் செயலகம் அருகே விவசாயிகள் நடத்திய இத்திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.