AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசு.. காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவன் பரிதாப பலி..

கண்ணிமைக்கும் நேரத்தில் தனது கண் முன்னே பசு மாடு உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவன் நரேஷ், பதற்றத்துடன் பசுவின் மீது கிடந்த மின்சாரக் கம்பியை அகற்ற முயன்றுள்ளான். அப்போது, எதிர்பாராதவிதமாக நரேஷ் மீதும் பயங்கர வேகத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் நரேஷ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தான்.

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசு.. காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவன் பரிதாப பலி..
பள்ளி மாணவன்
Vinoth V
Vinoth V | Updated On: 04 Jun 2026 14:51 PM IST

ஆம்பூர், ஜுன் 04: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, விவசாய நிலத்தில் அறுந்து விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்த பசுவையும், அதனைத் தொடர்ந்து அதை ஓட்டி வந்த 16 வயது பள்ளி மாணவனையும் மின்சாரம் தாக்கியதில் இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று 12ஆம் வகுப்பு முதல் நாள் பள்ளிக்குச் செல்லவிருந்த மாணவன், உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் (16). இவன் பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்துத் தேர்ச்சி பெற்றிருந்தான். இன்று, 12-ஆம் வகுப்புத் தொடங்குவதையொட்டி முதல் நாள் பள்ளிக்குச் செல்ல நரேஷ் தயாராகி வந்தான்.

இதையும் படிக்க : கோயம்பேட்டில் கார் ஏற்றி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு.. மேலும் ஒருவர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

பசு மாட்டை மேய்க்க சென்ற சிறுவன்:

இந்த நிலையில், நேற்று நரேஷ் அதே பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் தனது பசு மாட்டை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றுள்ளான். சோலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்திருந்தது. இதன் காரணமாக, அந்த விவசாய நிலத்தில் மின்சாரக் கம்பி ஒன்று அறுந்து விழுந்து கிடந்துள்ளது. விவசாய நிலத்தில் பசு மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது, அங்கு அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை எதிர்பாராதவிதமாகப் பசு மிதித்துவிட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து பசு மாடு அலறியடித்தபடி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தது.

பசுவை மீட்கப் போய் நேர்ந்த சோகம்:

கண்ணிமைக்கும் நேரத்தில் தனது கண் முன்னே பசு மாடு உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவன் நரேஷ், பதற்றத்துடன் பசுவின் மீது கிடந்த மின்சாரக் கம்பியை அகற்ற முயன்றுள்ளான். அப்போது, எதிர்பாராதவிதமாக நரேஷ் மீதும் பயங்கர வேகத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் நரேஷ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தான்.

போலீசார் தீவிர விசாரணை:

அதனைத் தொடர்ந்து, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், நரேஷும் பசு மாடும் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறினர். உடனே இச்சம்பவம் குறித்து மின்சாரத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அப்பகுதியில் மின் இணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமியக் காவல் துறையினர், உயிரிழந்த மாணவன் நரேஷின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கோர விபத்து குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: ‘கெட்டுப்போன சிக்கனில் பிரியாணி’.. 100க்கு மேற்பட்டோருக்கு பாதிப்பு.. இருவர் கவலைக்கிடம்!!

இன்று முதல் நாள் பள்ளிக்குச் செல்லவிருந்த மாணவன், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோலூர் கிராம மக்களிடையே நெஞ்சை உருக்கும் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் – வினோத்

Follow Us