Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கூட்டணியை இறுதி செய்ய தயாராகும் காங்கிரஸ்; திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு!

வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக அல்லது தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற சலசலப்பு நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது. இதற்கு முடிவு கட்டும் விதமாக திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஒருங்கிணைப்பு குழுவை தேசிய தலைமை அமைத்துள்ளது. எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா என்பது தெரியவில்லை.

கூட்டணியை இறுதி செய்ய தயாராகும் காங்கிரஸ்; திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு!
மாதிரிப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 22 Nov 2025 13:35 PM IST

சென்னை, நவம்பர் 22: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்காக திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியட்டுள்ள அறிவிப்பில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் இக்குழு இயங்கும் என்று தெரிவத்துள்ளார். அதோடு, அந்த குழுவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சூரஜ் ஹெக்டே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் நிவேதித் ஹால்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : +2 மாணவி கொலை: பள்ளி மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத அவலநிலை.. தலைவர்கள் கடும் கண்டனம்!!

பின்னடைவான பீகார் தேர்தல் முடிவு:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், காங்கிரஸ் ஒருங்கிணைப்பு குழு அமைத்து பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது. இந்த முறை தமிழகத்தில் அதிக தொகுதிகளை கேட்டு பெற வேண்டும என தமிழக தலைவர்கள் பலரும் கூறி வந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தல் தோல்வி அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. ஒருவேளை பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்திருந்தால், இங்கும் அவர்கள் உரிமையை கேட்டு பெற வேண்டிய இடத்தில் இருந்திருக்கலாம். ஆனால், தற்போது நிலைமை வேறு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

கடந்த முறை 25 தொகுதி, இந்த முறை?

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இதனால் இம்முறை எத்தனை தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கோரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதோடு, 40 தொகுதிகளை கேட்டுப்பெற வேண்டும் என முன்னதாக நிர்வாகிகள் வலியுறுத்தியிருந்தனர். ஆனால், தற்போது காங்கிரஸ் இருக்கும் நிலையில், கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை விட, இம்முறை குறைவாக ஒதுக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு:

குறிப்பாக, ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என கட்சியில் முக்கிய நிர்வாகிகள் பலர் முழக்கம் எழுப்பி வந்தனர். அதோடு, வெளிப்படையாகவே திமுக தங்களுக்கு ஆட்சியில் அதிகாரம் தர வேண்டும் என்றும் கூறி வந்தனர். இப்படியிருக்க, கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டால், இந்த கூட்டணி ஒன்று சேருமா, அல்லது தவெக பக்கம் செல்லுமா என்பது இன்னும் மர்மம் நீடிக்கும் விஷயமாகவே உள்ளது. அதேசமயம், தேசிய தலைவர்கள் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

இதையும் படிக்க : குளுகுளுவென மாறிய சென்னை.. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் கனமழை..

முடிவு கட்டும் அறிவிப்பு:

இதனிடையே, ‘தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ‘ஐந்து உறுப்பினர் குழு’ வை நியமித்திருப்பதை வரவேற்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் .சிதம்பரம் தெரிவித்துள்ளார். ‘இந்தியா கூட்டணி’ யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துவாதகவும் கூறியுள்ளார். அதோடு, அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.