தீயசக்தியும், தீர்ந்துபோன சக்தியும்… – பரப்புரை முடிந்த நிலையில் முதல்வர் விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
CM Vijay Urges Voters to Support TVK Candidates : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை அக்டோபர் 4, 2026 இன்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என முதல்வரும் தவெக தலைவருமான விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை, அக்டோபர் 4 : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரை அக்டோபர் 4, 2026 இன்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என முதல்வரும் தவெக தலைவருமான விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
பரப்புரை முடிந்த நிலையில் முதல்வர் விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பரப்புரையின்போது செங்கல்பட்டு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பு தமது நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்கும், தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் சத்தியபாமாவுக்கும் ‘விசில்’ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்க : Tamil Nadu Weather report: நாளை 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை




மேலும் அவர் தனது அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த சட்டமன்றத் தேர்தலில், யாருக்கும் வழங்கிடாத பேரன்பையும், பெருவாரியான வாக்குகளையும் நமக்கு வாரி வழங்கி, வாகை சூடும் வரலாற்றைத் திரும்ப வைத்து, உங்களின் முதல் சேவகனாக என்னை அமர்த்திய உங்களுக்கு என் நன்றிக் கடனைத் திருப்பி அளிக்கும் நேரமிது. உண்மையான மனசாட்சியுள்ள மக்களாட்சியை அமர்த்திய தமிழக மக்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது.
இந்த இடைத்தேர்தல் பரப்புரைக்காக நாம் வந்த போது, செங்கல்பட்டு மாவட்ட மக்களும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் நமக்களித்த வரவேற்பும், நம்மிடம் காட்டிய அன்பும் பாசமும் எதற்கும் நிகரில்லாதது. எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நிலைத்திருக்கக் கூடியது. இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. இதற்காக உங்களுக்கு வாழ்நாள் கடமைப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாக நம்மை ஏமாற்றி வந்த, தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுவீர்கள். மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரிப்பீர்கள். மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி சத்தியபாமா ஆகியோருக்கு விசில் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிப்பீர்கள் என்பதை இந்த நாடறியும். அதற்காக நான் முன்கூட்டியே உங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன்
மேலும், இந்தத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முழு ஒத்துழைப்பு நல்கிய தன்னார்வலர்கள் குழு, காவல் துறையினர், மருத்துவக் குழுவினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
இதையும் படிக்க : தவெக மைனாரிட்டி அரசுக்கு தக்க பதிலடி – தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்
தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், மக்கள் நலன்களைக் காப்பதற்காக, எதிலும், எப்போதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம். லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்துடன் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இப்போது போலவே எப்போதும் தொடர்வோம்! ண்டும் நினைவூட்டுகிறோம். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்களே, நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய ஒரே சின்னம் உங்கள் வெற்றிச் சின்னமான விசில் சின்னம் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.