மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஒரே வாரத்தில் மீண்டும் திறப்பு.. தவெக பெயரைப் பயன்படுத்தி முறைகேடு?
TASMAC Shop Reopens: இக்கடையை சட்டவிரோதமாக மீண்டும் திறந்தது குறித்து விசாரித்த போது மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளியானது. இக்கடையின் உரிமையாளர், தான் 'தமிழக வெற்றி கழகம்' கட்சியில் இணைந்திருப்பதாகவும், அந்தப் பின்னணியை வைத்தே கடையைத் திறந்துள்ளதாகவும் கூறி வந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் அரசு உத்தரவின்படி மூடப்பட்ட அரசு மதுபானக் கடை (டாஸ்மாக்), ஒரே வாரத்தில் விதிகளை மீறி மீண்டும் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வரும் சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் காவல் நிலையம், பேருந்து நிலையம், புகழ்பெற்ற கோவில், அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள முக்கியப் பகுதியில் மூன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் நீண்ட காலமாக இயங்கி வந்தன. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவின்படி, சில நாட்களுக்கு முன்பு இந்த மூன்று கடைகளும் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டன.
இதையும் படிக்க: “உன் அப்பன் சாகுறத பாரு”.. மகள் கண் முன்னே துடிதுடிக்க கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்!!
ஒரே வாரத்தில் டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு:
ஆனால், மூடப்பட்ட கடைகளில் 5556 எண் கொண்ட டாஸ்மாக் கடை மட்டும், மூடப்பட்ட ஒரே வாரத்திற்குள் மீண்டும் திறக்கப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக எவ்வித அச்சமுமின்றிச் செயல்பட்டு வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், மற்ற இரண்டு கடைகள் மூடப்பட்ட நிலையில் இந்தக் கடை மட்டும் எப்படி மீண்டும் திறக்கப்பட்டது எனப் புகார் எழுப்பினர். இதுகுறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டபோது, “இந்தக் கடையை மூடுவதற்கான ஆணை தங்களுக்கு வரவில்லை” எனப் பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளனர்.
டாஸ்மாக் மாவட்ட நிர்வாகத்தின் விளக்கம்:
இந்த விதிமீறல் குறித்து செய்தியாளர்கள் டாஸ்மாக் மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, “அரசு வெளியிட்ட மூடப்பட வேண்டிய கடைகளின் அதிகாரப்பூர்வப் பட்டியலில் இந்த 5556 எண் கொண்ட கடையின் பெயரும், எண்ணும் தெளிவாக இடம் பெற்றுள்ளது” என்பதை உறுதிப்படுத்தினர். மேலும், விதிகளை மீறித் திறக்கப்பட்டுள்ள இந்தக் கடையை அடுத்த இரண்டு நாட்களுக்குள் முழுமையாக மூடுவதற்குத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
கட்சிப் பெயரைப் பயன்படுத்தி மிரட்டல்? தவெக அதிரடி:
இக்கடையை சட்டவிரோதமாக மீண்டும் திறந்தது குறித்து விசாரித்த போது மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளியானது. இக்கடையின் உரிமையாளர், தான் ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சியில் இணைந்திருப்பதாகவும், அந்தப் பின்னணியை வைத்தே கடையைத் திறந்துள்ளதாகவும் கூறி வந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இவ்விவகாரம் தொடர்பாகத் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டச் செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “குறிப்பிட்ட கடை உரிமையாளருக்கும் எங்களது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை; அவர் சுயலாபத்திற்காகப் பொய்க் குற்றச்சாட்டைக் கூறி, கட்சியின் பெயரைத் தவறாகச் சித்தரித்து வருகிறார்” எனத் திட்டவட்டமாக மறுத்தார். மேலும், கட்சியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்திய அந்த நபர் மீது தவெக சார்பில் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவெக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பொது மக்களை அரிவாளால் வெட்டிய கும்பல்.. தென்காசி – நெல்லையில் போலீசார் அதிரடி வேட்டை.. சுட்டு பிடிக்க உத்தரவு?
தற்போது மாவட்ட நிர்வாகமும், தவெக கட்சி நிர்வாகமும் இணைந்து இந்தச் சட்டவிரோத மதுக்கடையை நிரந்தரமாக மூடுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதால் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பு நீடித்து வருகிறது.