அடுத்த 4 நாட்களுக்கு சென்னையின் வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்க
Temperature rise warning : தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை மேலும் உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக சென்னையில் அடுத்த 4 நாட்கள் வெப்பநிலை 5 டிகிரி அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளது.
சென்னை, மார்ச் 22 : தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை மேலும் உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மார்ச் 23 , 2026 முதல் மார்ச் 26 2026 அன்று வரை, சென்னை உட்பட மாநிலத்தின் சில இடங்களில் இயல்பை விட சுமார் 5 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தென் தமிழகத்தை ஒட்டிய கடல்பகுதிகளில் இருந்து மகாராஷ்டிரா வரை வளிமண்டலத்தின் கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால், மார்ச் 23, 2026 மற்றும் 24, 2026 ஆகிய 2 நாட்கள் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க : கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத்தீ.. தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு துறை!




அதனைத் தொடர்ந்து மார்ச் 25, 2026 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும், மார்ச் 27 மற்றும் 28, 2026 ஆகிய 2 நாட்கள் மீண்டும் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 23, 2026 முதல் மார்ச் 26 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், மார்ச் 23, 2026 அன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 95 டிகிரி அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அடுத்த 3 நாட்களுக்கு மழை கொட்டும்.. வெயில் குறையுமா?.. வானிலை அப்டேட் இதோ!!
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பெய்த மழை அளவு
இதற்கிடையில், மார்ச் 22, 2026 அன்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகள் பற்றியும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி எஸ்டேட்டில் அதிகபட்சமாக 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும், தென்காசி மாவட்டம் குண்டாறு அணை, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், அரியலூர் மாவட்டம் டி.பாலூர் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் சூழ்நிலை இருப்பதால், மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.